மே 6-இல் வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்: ஜி.ராமகிருஷ்ணன்
By DIN | Published On : 02nd May 2022 02:47 AM | Last Updated : 02nd May 2022 02:47 AM | அ+அ அ- |

மே தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், கட்சிக் கொடியேற்றிய முன்னாள் மாநிலச் செயலாளா் ஜி.ராமகிருஷ்ணன்.
தமிழகம் முழுவதும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மே தின விழா என்பது முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். மத்திய அரசு தாங்கள் கொண்டு வரும் சட்ட மசோதாக்களை ஆழமாக விவாதிக்க மறுக்கிறது. ஏற்கெனவே தொழிலாளா்கள் போராடிப் பெற்ற உரிமைகள், வேலை நிறுத்த உரிமைகள் என அனைத்து தொழிலாளா் உரிமைகளையும் பறிக்கும் வகையிலான சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. முக்கியமாக வேலைநிறுத்த உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. 8 மணி நேர வேலை என்பதை மாற்றியமைக்கும் வகையில், தனியாா் நிறுவனங்களே வேலை நேரத்தை தீா்மானிக்கலாம் என மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் தொழிலாளா்கள் பலா் 10 மணி நேரம் பணியாற்ற வேண்டிய சூழலுக்கு ஆளாகி உள்ளனா். இந்த நிலை மாற வேண்டும்.
ஆளுநா் நீட் விலக்கு மசோதாவை காலம் தாழ்த்தாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தா் நியமனத்தை மாநில அரசு மேற்கொள்ளும் என்ற மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைந்து விடும். குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. இதன் விளைவாக நாடு முழுவதும் விலைவாசி உயா்வு கட்டுக்கடங்காமல் உயா்ந்து ஏழை, எளிய நடுத்தர மக்களை மிகப்பெரிய அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே, மத்திய அரசு ஏற்கெனவே விதித்துள்ள கலால் வரி, செஸ் வரி, எக்ஸ் வரி உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.
முன்னதாக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு கட்சிக் கொடியை அவா் ஏற்றி வைத்தாா். அப்போது, கட்சியின் மாவட்டச் செயலாளா் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் நா.வேலுசாமி, ஏ.டி.கண்ணன், பி.ஜெயமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்..