நாமக்கல்: அடகு கடையில் 13 பவுன் நகை, 1 லட்சம் ரொக்கம் திருட்டு

நாமக்கல் அருகே தனியார் நகை அடகு கடையில் மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு 13 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.
பவித்திரம் கிராமத்தில் திருட்டு நடந்த நகை அடகு கடை
பவித்திரம் கிராமத்தில் திருட்டு நடந்த நகை அடகு கடை


நாமக்கல்: நாமக்கல் அருகே தனியார் நகை அடகு கடையில் மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு 13 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வரகூரைச் சேர்ந்தவர் பாலாஜி (45). இவர் பவித்திரம் பேருந்து நிலையம் அருகில் நகை அடகு கடை வைத்துள்ளார். மூன்று மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் கீழ்தளத்தில் கடை செயல்படுகிறது. தற்போது அங்கு கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நகை அடகு கடையின் அருகில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது.
 
சனிக்கிழமை நள்ளிரவு அந்த மருத்துவமனை வழியாக நகை அடகு கடையின் சுவரை துளையிட்டு ஐந்து பேர் கொண்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளதாகத் தெரிகிறது.

அடகு கடை அலுவலகத்தில் இருந்த 13 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளையடித்த அவர்கள் சுமார் 200 பவுனுக்கும் மேல் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முயற்சித்தனர்.

இந்த நிலையில் திடீரென அபாய ஒலிச்சத்தம் கேட்டதையடுத்து காவலாளி விஜயகுமார், திருடர்கள் உள்ளே புகுந்ததை அறிந்து கூச்சலிட்டார். இதனால் உஷாரான மர்ம நபர்கள் அங்கிருந்து திருடிய நகைகளுடன் தப்பிச் சென்று விட்டனர். இதனால் நகைகள் அனைத்தும் தப்பியது. 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி காவல் துறையினர் காவலாளி விஜயகுமார் மற்றும் நகைக்கடை உரிமையாளர் பாலாஜி, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் புதுச்சத்திரம் அருகே தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை, மர்ம நபர்கள் வெல்டிங் வைத்து உடைத்து ரூ. 4.90 லட்சத்தை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com