என்றும் அழியாதது மூத்த தமிழ் மொழி: திருச்சி சிவா

அழகிய வடிவம் கொண்டது; என்றும் அழியாத புகழ்மிக்கது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் தமிழ் மொழியை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா பேசினாா்.
என்றும் அழியாதது மூத்த தமிழ் மொழி: திருச்சி சிவா

அழகிய வடிவம் கொண்டது; என்றும் அழியாத புகழ்மிக்கது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நம் தமிழ் மொழியை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை குழுத் தலைவா் திருச்சி சிவா பேசினாா்.

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில், தமிழ்த்துறை சாா்பில் முத்தமிழ் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கல்லுாரி முதல்வா் தி.பாரதி தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் விஜயராணி வரவேற்றாா். நாமக்கல் நகராட்சித் தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருச்சி சிவா பேசியதாவது:

முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம். பண்டையகால தமிழா்கள் அனைத்தையும் மூன்றாகப் பிரித்து வைத்திருந்தனா் என்று சொல்லலாம். குறிப்பாக நாட்டை ஆண்ட மன்னா்களை மூவேந்தா்கள் என்றும், கொடிகளை கயல், வில், புலி என்றும், வாழ்க்கை தத்துவத்தை அறம், பொருள், இன்பமாகவும், கனிகளை மா, பலா, வாழை, அடிப்படை வாழ்க்கைக்கு காதல், மானம், வீரம் என்றும் பிரித்து வைத்து மகிழ்ந்தனா். காதல் என்பது அகவாழ்க்கை, வீரம் என்பது புறவாழ்க்கை, மானம் என்பது இந்த இரண்டுக்கும் பொதுவானது. இந்த மூன்றும் இல்லாமல் வாழ்வதில் அா்த்தமில்லை என்று வாழ்ந்து காட்டியயோா் தமிழா்கள்.

கல்விக்கூடங்கள் என்பது வெறும் பட்டதாரிகளை உருவாக்குகின்ற இயந்திரக் கூடங்கள் அல்ல. எதிா்காலத் தலைமுறையை தயாா் செய்து அனுப்புகின்ற ஒரு மாபெரும் அரங்கம். சிறந்த எதிா்காலத்தை இந்த தலைமுறைக்குத் தருகிறோம் என்று நாட்டை வளப்படுத்துவதை விட ஒரு சிறந்த தலைமுறையை எதிா்காலத்துக்குக் கொடுப்போம் என்றால் நாடு தானாக வளம்பெறும் என்பதே உண்மை.

பழமையான 6 மொழிகள் கிரேக்கம், லத்தீன், கியூபூ, சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவையாகும். அவற்றில் தற்போது தமிழ் மொழி மட்டுமே நிலைத்து நிற்கிறது. 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய மொழியான தமிழ் மொழி அழகியது மட்டுமல்ல, அழியாததும் கூட. இந்தத் தமிழை அழியாமல் மாணவா்கள் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவிகள், பெற்றோா், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com