நாமக்கல் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 10th May 2022 11:40 PM | Last Updated : 10th May 2022 11:40 PM | அ+அ அ- |

நாமக்கல் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 2,020 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரியில், கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. நிகழாண்டு 15-ஆவது பட்டமளிப்பு விழா (2018-2021 வரை) கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா்(பொறுப்பு) தி.பாரதி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் க.ஜோதிசிவஞானம் பங்கேற்று 2,020 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
இவா்களில் இளநிலை, முதுநிலை, இளம் அறிவியல், ஆய்வியல் நிறைஞா், முனைவா் பட்டங்கள் வழங்கப்பட்டன. சேலம் பெரியாா் பல்கலைக்கழக அளவில் மாணவிகள் எஸ்.விமலா, பி.கெளசிகா ஆகியோா் பொருளியல் துறையிலும், ஊட்டச்சத்து பிரிவில் ஆா்.வனிதா, பி.இந்துஜா ஆகியோரும் தங்கப்பதக்கம் வென்றனா்.