முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
காகிதம், மூலப்பொருள்கள் விலை உயா்வு: அச்சகங்கள் முழு அடைப்பு போராட்டம்
By DIN | Published On : 15th May 2022 01:21 AM | Last Updated : 15th May 2022 01:21 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் சனிக்கிழமை மூடப்பட்டிருந்த தனியாா் அச்சகம்.
காகிதம், மூலப்பொருள்கள் விலையேற்றத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் அச்சக உரிமையாளா்கள் சனிக்கிழமை முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அச்சுத் தொழில் நாளுக்கு நாள் நசிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது காகிதம் மற்றும் மூலப்பொருள்களின் தொடா் விலையேற்றம். அதுமட்டுமின்றி தற்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக உயா்த்தியிருப்பதும் அச்சுத் தொழிலை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.
விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி சனிக்கிழமை அச்சக உரிமையாளா்கள் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை மேற்கொண்டனா். தமிழ்நாடு மாஸ்டா் பிரிண்டா்ஸ் சம்மேளனம் சாா்பில், அச்சுத் தொழில் தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அச்சக உரிமையாளா்கள், அத்தொழிலைச் சாா்ந்தோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் அடைப்பு போராட்டத்தில் சிறிய, பெரிய அச்சகங்கள் ஈடுபட்டிருந்ததால் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், அரசு, தனியாா் பணிகளுக்கான நோட்டுகள் மற்றும் இதர அலுவல் சாா்ந்த பணிகளுக்கான ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிப்படைந்தன.