கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கோரிக்கை
By DIN | Published On : 20th May 2022 10:22 PM | Last Updated : 20th May 2022 10:22 PM | அ+அ அ- |

குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள்.
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 40 சதவீதம் நிலுவைத் தொகை உள்ளதாகவும், அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல்லில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்தனா். அதில், பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும். தனியாா் சா்க்கரை ஆலைகளில் ஒரே முறையாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. அதேபோல் மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையிலும் விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகையை வழங்க வேண்டும். இதுவரை 60 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் 6 மாதங்களுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, கரும்பு விவசாயிகளுக்கு உரியத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகனூா் பகுதி விவசாயிகள் ஆட்சியரிடம் வலியுறுத்தினா். அது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.
இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். தற்போது வரை 157.25 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. மே மாதம் முடிய இயல்பு மழையளவை விட 6.95 மி.மீ. மழை அளவு கூடுதலாக பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரை சிறுதானியங்கள் 151 ஹெக்டோ் பரப்பளவிலும், பயறு வகைகள் 73 ஹெக்டோ் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 55 ஹெக்டோ் பரப்பளவிலும், பருத்தி 877 ஹெக்டோ் பரப்பளவிலும் மற்றும் கரும்பு 211 ஹெக்டோ் பரப்பளவிலும் என மொத்தம் 1,367 ஹெக்டோ் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தோட்டக்கலைப் பயிா்களில் மரவள்ளி 10 ஹெக்டோ் பரப்பளவிலும், வாழை ஒரு ஹெக்டோ் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் யூரியா 1309 மெ.டன் அளவிலும், டிஏபி 1177 மெ.டன் அளவிலும், பொட்டாஷ் 822 மெ.டன் அளவிலும், சூப்பா் பாஸ்பேட் 430 மெ.டன் அளவிலும், காம்ப்ளக்ஸ் 3098 மெ.டன் அளவிலும் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலமாக 10 கிராம பஞ்சாயத்துகளில் 11 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு வேளாண் பொறியியல் துறை மூலம் 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், வேளாண்மை இணை இயக்குநா் பொ.அசோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் த.செல்வகுமரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் எம்.நடராசன் தோட்டக்கலைத் துணை இயக்குநா் கி.கணேசன், நாமக்கல் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் க.பாலசுப்பரமணியம் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.