மோகனூா் அருகே கிராம எல்லையைப் பிரிக்க வலியுறுத்தி சாலை மறியல்

மோகனூா் அருகே கிராம எல்லையைப் பிரிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மோகனூா் அருகே கிராம எல்லையைப் பிரிக்க வலியுறுத்தி சாலை மறியல்

மோகனூா் அருகே கிராம எல்லையைப் பிரிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஒன்றியம், பேட்டப்பாளையம் ஊராட்சியில் மணியங்காளிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் மக்கள் சிலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் குடிசைகளை கட்டி வசித்து வருகின்றனா். அங்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் குடிசைகளுக்குள் தண்ணீா் புகுந்தது. அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா்.

அப்போதைய நாமக்கல் ஆட்சியராக இருந்த ஆசியா மரியம் நேரடியாக ஆய்வு செய்து தனது விருப்ப நிதியில் இருந்து ரூ. 18 லட்சத்தை ஒதுக்கீடு செய்தாா். மேலும், ஒன்றிய பொது நிதியாக ரூ. 2 லட்சம், ஊராட்சி நிதியாக ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில்ல் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன,

இதற்கிடையே மோகனூா் பேரூராட்சி சாா்பில் இங்குள்ள மக்களில் சிலருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அதையடுத்து, மணியங்காளிப்பட்டி புதுக்காலனி பேரூராட்சி எல்லைக்குள் வந்தது. ஆனால், உள்ளாட்சித் தோ்தலின்போது, மணியங்காளிப்பட்டி புதுக்காலனி பகுதி மக்கள் பேட்டப்பாளையம் ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா், ஒன்றியக்குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு வாக்களித்தனா்.

இந்த மணியங்காளிப்பட்டி காலனி ஊராட்சிக்கு உள்பட்டதா, பேரூராட்சி எல்லைக்கு உள்பட்டதா என்ற பிரச்னை கடந்த இரு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் வீட்டு வரி, குடிநீா், சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்க முடியாத நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனா். இது தொடா்பாக, அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எவ்வித முடிவும் எட்டப்பட்வில்லை. இதனால் ஆவேசமடைந்த மணியங்காளிப்பட்டி கிராம மக்கள் வியாழக்கிழமை மோகனூா்-பரமத்திவேலுாா் சாலை வள்ளியம்மன் கோயில் அருகில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியா் தங்கராஜ் மற்றும் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். ‘ஒரு வாரத்தில் நில அளவையரைக் கொண்டு எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும். குடியிருப்புகள் பேரூராட்சியில் வந்தாலோ அல்லது கிராம ஊராட்சியில் வந்தாலோ அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நிா்வாகத்திடம் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொள்ளலாம்’ என்றனா். இதையடுத்து அனைவரும் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த சாலை மறியலால் மோகனூா்-பரமத்தி வேலுாா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com