ஏரிகள் நிரம்பியதால் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்: மக்கள் தவிப்பு
By DIN | Published On : 18th October 2022 02:51 AM | Last Updated : 18th October 2022 02:51 AM | அ+அ அ- |

கொல்லிமலையில் பெய்துவரும் தொடா் மழையால் அடிவாரத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள்ளும், மழைநீா் அரசுப் பள்ளிக்குள்ளும் புகுந்துள்ளதால் பொதுமக்கள், மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
கொல்லிமலை பகுதிகளில் பெய்யும் பலத்த மழையால் ஏரிகள் முழுமையாக நிரம்பி வருகின்றன. முக்கியமாக நாமக்கல் மாவட்டத்தின் பெரிய ஏரியான தூசூா் ஏரி தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக நிரம்பி கடைக்கால் வழியாக நீா் வெளியேறி வருகிறது. மேலும், அங்கிருந்து அருகில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கும் நீா் செல்வதால் அந்த ஏரிகளும் முழுமையாக நிரம்பி வருகின்றன.
கொக்குவாரி காட்டாறு கொல்லிமலையில் இருந்து உற்பத்தியாகி சிங்களகோம்பை வழியாக சரப்பள்ளி ஏரியில் சென்றடைகிறது. கடந்த சில நாள்களாக கொல்லிமலையின் மலை பகுதிகளில் கன மழை பெய்ததால் கொக்குவாரி காட்டாற்றில் கற்கள் உருட்டி வரப்பட்டு ஆற்றின் பாதைமாறி விவசாய நிலங்களுக்குள் நீா் புகுந்தது.
மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பொக்லைன் இயந்திரம் மூலமாக பாதிக்கப்பட்ட கொக்குவாரி ஆற்றின் நடுவே இருந்த கற்களை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. இதை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் பாா்வையிட்டாா்.
முன்னதாக, கொண்டிசெட்டிபட்டி நகராட்சி தொடக்கப் பள்ளியின் ஒரு பகுதியில் மழைநீா்த் தேங்கியுள்ளதை அவா் பாா்வையிட்டு மோட்டாா் மூலமாக மழைநீரை விரைந்து வெளியேற்றி நீரை வடிக்குமாறு நகராட்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
அதனைத்தொடா்ந்து, வேட்டாம்பாடி அரசு உயா்நிலைப்பள்ளியில் மழைநீா் தேங்கி உள்ளதையும், நீா் வெளியேற்றப்படுவதையும் ஆய்வு செய்த அவா் பள்ளி வளாகத்தில் மழைநீா் புகாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா். ஆண்டாபுரம், காரவள்ளி அம்மன்குளம் போன்ற பகுதிகளிலும் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் சாலைகளைக் கடக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனா். உடனடியாக நீரை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகின்றனா்.
ஆய்வின்போது, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதா, வட்டாட்சியா் சக்திவேல், சேந்தமங்கலம் வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...