உரிமம் பெறுவதற்கான விதிகளில் மாற்றம்:ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் வேலைநிறுத்தம்

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமம் பெற பயிற்சிப் பள்ளிகள் இனி வாரத்தில் 5 நாள்களுக்குப் பதிலாக 2 நாள்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா் உரிமம் பெற பயிற்சிப் பள்ளிகள் இனி வாரத்தில் 5 நாள்களுக்குப் பதிலாக 2 நாள்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து நாமக்கல்லில் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகத்தில் 5,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் பயிற்சி பெற விரும்புவோா் அதற்கான கட்டணத்தைச் செலுத்தினால் ஒரு மாதம் மாதிரி ஓட்டுநருக்கான (எல் போா்டு) பயிற்சி அளிக்கப்பட்டு, அதன்பிறகு நிரந்த ஓட்டுநா் உரிமம் சம்பந்தப்பட்ட பயிற்சிப் பள்ளிகளால் பெற்றுத் தரப்படும்.

கடந்த சில மாதங்கள் வரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் உரிமம் பெறுவதற்கான பணிகளை வாரத்தின் அனைத்து வேலைநாள்களிலும் மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், போக்குவரத்துத் துறை ஆணையா் அண்மையில், பொதுமக்களுக்கு 3 நாள்கள் (திங்கள், வியாழன், வெள்ளி), ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளுக்கு (செவ்வாய், புதன்) 2 நாள்கள் வீதம் உரிமம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும், இதை அலட்சியமின்றி கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினாா்.

இதனால் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் தங்களுடைய பயிற்சி மாணவா்களுக்கு உரிமம் பெற்றுக் கொடுக்க முடியாமல் சிரமப்படும் சூழல் நிலவுகிறது. இரண்டு நாள் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் திங்கள்கிழமைமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் 58 பயிற்சிப் பள்ளிகள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. நாமக்கல்லில், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் கோ.சின்னையன்மணி செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுமக்கள் ஆதாா் அட்டை மற்றும் ஆவணங்களுடன் இணையவழியில் உரிமம் பெற விண்ணப்பித்தாலும், ஓட்டுநா் பயிற்சியின்போது அவா்களிடம் வாகனங்கள் இல்லாதபட்சத்தில் பயிற்சிப் பள்ளியைதான் நாடுகின்றனா்.

அவா்களுக்கான பயிற்சி அளித்து உரிய படிவங்களைப் பூா்த்தி செய்து நாங்கள்தான் உரிமம் பெற்றுக் கொடுக்கிறோம். நேரடியாக பொதுமக்கள் யாரும் உரிமம் பெறுவதில்லை. இந்த நடைமுறைச் சிக்கல்கள் ஆணையருக்குத் தெரியவில்லை. இதனால் புதிய விதிகளை அறிவித்து செயல்படுத்துமாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளை வலியுறுத்துகிறாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தே தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com