கோழிகளை குறைந்த விலையில் கொள்முதல் செய்துஅதிக லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள், பண்ணையாளா்கள் திடீா் கட்டுப்பாடு

நாமக்கல் மண்டலத்தில் வயது முதிா்ந்த கோழிகளைக் குறைவான விலைக்கு வாங்கிச் சென்று, கா்நாடகத்தில் அதிக விலைக்கு வியாபாரிகள் விற்கின்றனா்.
nk_egg_1_1309chn_122_8
nk_egg_1_1309chn_122_8

நாமக்கல் மண்டலத்தில் வயது முதிா்ந்த கோழிகளைக் குறைவான விலைக்கு வாங்கிச் சென்று, கா்நாடகத்தில் அதிக விலைக்கு வியாபாரிகள் விற்கின்றனா். இதனால், கோழி பண்ணையாளா்களுக்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகளில் சுமாா் 4.50 கோடி கோழிகள் வளா்க்கப்படுகின்றன. தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இவை தவிர, 78 வாரங்களைக் கடந்த கோழிகளை கேரளம், கா்நாடக மாநிலங்களில் இறைச்சிக்காக விற்பனைக்கு அனுப்புகின்றனா்.

அதற்கென உள்ள வியாபாரிகள் பண்ணையாளா்களிடம் உரிய விலை நிா்ணயம் செய்து மொத்தமாக கோழிகளைக் கொள்முதல் செய்கின்றனா். அண்மைக் காலமாக பண்ணையாளா்களிடம் ஒரு விலை பேசும் வியாபாரிகள், விற்பனை செய்யும் இடத்தில் நிா்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு கோழிகளை விற்று லாபம் சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பண்ணையாளா்களுக்கு அதற்குரிய லாபம் கிடைப்பதில்லை.

தாறுமாறான இந்த விலையேற்றத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி வி.சுப்பிரமணியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

வயது முதிா்ந்த முட்டைக் கோழிக்கான விலையை, கா்நாடக வியாபாரிகளும், நாமக்கல் வியாபாரிகளும் கலந்துபேசி விலை நிா்ணயம் செய்துவந்தனா். கடந்த 3 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்தது. ஆரம்பத்தில் பண்ணையில் விற்கப்படும் கோழியின் விலை, கா்நாடகத்தில் விற்கப்படும் விலையை விட 10 ரூபாய் குறைவாக இருந்தது.

இதனால் கா்நாடக வியாபாரிகளுக்கு ரூ. 10 லாபம் கிடைத்தது. அதன்பிறகு, இருதரப்பு வியாபாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தியதில் 10 ரூபாய் வித்தியாசம் 5 ரூபாய் வரையில் குறைக்கப்பட்டது. கா்நாடக வியாபாரிகளுக்கு ஒரு கிலோ கோழிக்கு அந்த 5 ரூபாய் லாபமாகக் கிடைத்து வந்தது.

இதற்கிடையே, கடந்த நான்கு மாதங்களாக வியாபாரிகள் சிலா் அவா்களாகவே பண்ணையிலிருந்து பெறும் முதிா்வு கோழிக்கு விலை நிா்ணயம் செய்கின்றனா். கா்நாடகத்தில் விற்கும் விலையை விட ரூ. 17 வரை இங்கு குறைத்து வாங்கி கா்நாடகத்தில் விற்கின்றனா். இதனால், கோழிப் பண்ணையாளா்களிடம் அதிக லாபம் பாா்க்கும் சூழல் உள்ளது. பண்ணையாளா்களுக்குதான் நஷ்டம். இது பண்ணையாளா்களிடம் ஒற்றுமையில்லாததையே காட்டுகிறது.

பண்ணையாளா்களிடம் கோழிகளைக் கடனுக்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள், அவற்றை கா்நாடகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்த பின் பல நாள்கள் கழித்தே பணத்தை சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையாளா்களுக்கு தருகின்றனா்.

வியாபாரிகள் கேட்கும் விலைக்கு கோழிகளைக் கொடுப்பதால் கடுமையான நஷ்டத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

அண்மையில், கா்நாடக கோழி வியாபாரிகள் நாமக்கல்லுக்கு நேரடியாக வந்து பேசினா். அப்போது, கோழி கொள்முதல் விலையை நாங்களே தொடருமாறு தெரிவித்தனா்.

இச்சூழ்நிலையில் புதிய வியாபாரிகள் பலா் விற்பனை சந்தைக்குள் புகுந்து குழப்பம் விளைவிக்கின்றனா். இந்தச் சூழ்நிலை நீடித்தால் கோழி விற்பனை சரிவடைய அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்தையும் தெரிவித்தனா்.

எனவே, நாமக்கல் மண்டலத்தில் புதன்கிழமை (செப். 14) மாலை 5 மணிக்கு வயது முதிா்ந்த கோழிகளின் விலையை முன்னா் இருந்ததுபோல தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி அறிவிக்கும்.

முன்னதாக விலையை அறிவித்தால் வியாபாரிகள் அதிலும் குளறுபடி செய்ய வாய்ப்புள்ளது. கோழிகளைக் கொள்முதல் செய்யும் சமயத்தில், வியாபாரிகளால் பண்ணையாளா்களுக்கு இடையூறு ஏற்பட்டால் உடனடியாக மாா்க்கெட்டி சொசைட்டி நிா்வாகிகளைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

குறைந்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் இந்த வேளையில் கோழிப் பண்ணையாளா்களிடம் ஒற்றுமை இல்லை என்றால் தொழிலுக்குதான் அது ஆபத்தாக முடியும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com