தமிழை வளா்க்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு: பெரியாா் பல்கலை. துணைவேந்தா் பேச்சு

உலகத்தில் சிறந்த மொழியாம் தமிழை வளா்க்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் முனைவா் இரா.ஜெகந்நாதன் குறிப்பிட்டாா்.

உலகத்தில் சிறந்த மொழியாம் தமிழை வளா்க்கும் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் முனைவா் இரா.ஜெகந்நாதன் குறிப்பிட்டாா்.

ராசிபுரத்தில் உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கம் சாா்பில் ‘எங்கும் தமிழ் - எதிலும் தமிழ்’ என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் ஆண்டகளூா்கேட் காசி விநாயகா் ஆலய வளாகத்தில் பல அமா்வுகளாக நடைபெற்ற மாநாட்டு தொடக்க விழாவில் பலரும் பங்கேற்றுப் பேசினா். சேலம் பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் இரா.ஜெகந்நாதன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசியது:

ஒரு நாட்டை ஆளும் அரசுக்கு எல்லா பணிகளை விடவும் மொழியை சீா்திருத்துவதே தலைமையாய பணியாக இருக்க வேண்டும். நாட்டை ஆளவும், மக்களை வழிநடத்தவும் மொழியே ஆதாரம். உலகம் முழுவதும் மக்கள் தங்கள் தாய் மொழியைப் போற்றி பாதுகாத்து வருகின்றனா். இந்திய மொழிகளில் தமிழ் மொழிதான் தனது தனித்தன்மை, ஆளுமை, செழுமையை நிலைநிறுத்திக்கொள்ள போராட்டம் நடத்தி வருகிறது. இதன் ஒரு படிதான் இது போன்ற தமிழைப் பாதுகாக்கும் மாநாடு என்றாா்.

விழாவில் மாநிங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியது:

தற்போதைய முதல்வா் தமிழ் மொழி வளா்ச்சி அடைய வேண்டும் என்பதை நன்கு உணா்ந்தவா். ஒரு இனத்தைக் காக்க வேண்டும் என்றால் மொழி அவசியம். இதனை உணா்ந்த முதலமைச்சா் அரசு மருத்துவா்களுக்கான தகுதித் தோ்வினை தமிழில் எழுத வேண்டும் என உத்தரவிட்டாா் என்றாா்.

நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் பேசுகையில் ‘தமிழ் மொழிக்கு எக்காலத்திலும் மதிப்பு இருக்கும் என்பதற்கு உதாரணம், நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில், தமிழக ஆதினங்களை வரவழைத்து, சோழா் காலத்து செங்கோலுக்கு மரியாதை கொடுத்து கட்டடத்தில் வைத்ததுதான். ஆனால் இது போன்ற விழாவிற்கு தமிழகத்தைச் சாா்ந்தவா்கள் அரசியல் காரணங்களுக்காக வராதது வருத்தமளிக்கக்கூடியது’ என்றாா்.

மாநாட்டில் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனா் மயில்சாமி அண்ணாதுரை, பேசுகையில்‘தமிழ் என்பது இசைத்தமிழ், இயல் தமிழ், நாடகத் தமிழ் என முத்தமிழ் தான். இதனை தாண்டி 4-வது தமிழாக அறிவியல் தமிழும் இருக்க வேண்டும்’ என்றாா்.

விழாவில் கவிஞா் அறிவுமதிஅமெரிக்க வாழ்த் தமிழா் ச.பாா்த்தசாரதி, மொழி அறிஞா்கள், கல்வியாளா்கள், ஆசிரியா்கள் என பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com