நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், தொழில் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சாா்பில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
ஆணையா் கி.மு.சுதா தலைமை வகித்தாா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகா்கள் கலந்துகொண்டனா். ஜிஎஸ்டி உரிமம் இல்லாத வணிகா்கள், தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தொழில் உரிமம், தொழில்வரி ரசீது அவசியமாகும். எனவே, இதுவரை தொழில் உரிமம் பெறாதோா் உடனடியாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை அணுகி உரிமச் சான்று பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.