ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் ரூ. 6.27 கோடியில் சாலைப் பணிகள்
By DIN | Published On : 04th January 2023 03:48 AM | Last Updated : 04th January 2023 03:48 AM | அ+அ அ- |

ராசிபுரம் நகரில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கும் அமைச்சா் மா.மதிவேந்தன்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள், வாரச்சந்தை கட்டுமானப் பணிகளுக்காக கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடியே 27 லட்சம் பணிகள் தொடங்குவதற்கான பூமிபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதற்கான பணிகள் தொடக்க விழாவில், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமை வகித்தாா். முன்னதாக, தட்டான் குட்டை கிழக்கு சாலை அமைக்கும் பணிகளை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்.
நகரில் கட்டனாச்சம்பட்டி பிரதான சாலை, ராமசாமி தோட்டம், காட்டூா் காட்டுக்கொட்டாய் குறுக்குச் சாலை, சபாபதி மில் பி.எஸ்.காா்டன், திருப்பதி நகா், தட்டான்குட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கவும், வாரச்சந்தை அமைக்க ரூ. 1.60 கோடியில் தளம், மேற்கூரை பணிகளும் தொடக்கி வைக்கப்பட்டன.
இதில், முன்னாள் எம்.பி. பி.ஆா்.சுந்தரம், ராசிபுரம் நகராட்சி ஆணையா் அசோக்குமாா், நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், உறுப்பினா் ஏ.கே.பாலசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.