பட்டாசு விபத்து: 34 பேருக்கு ரூ. 7.55 லட்சம் நிவாரண நிதி

மோகனூா் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ. 7.55 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மோகனூா் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ. 7.55 லட்சம் நிவாரண நிதியை அமைச்சா் எம்.மதிவேந்தன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் மேட்டுத் தெருவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். 8 போ் காயமடைந்தனா். 65 வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பேரிடா் மேலாண்மை நிதி மற்றும் மாவட்ட ஆட்சியா் விருப்ப நிதி வழங்கும் நிகழ்ச்சி மோகனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், விபத்தில் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு ரூ. 7.55 லட்சம் நிவாரண நிதியினை வனத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா்.

வீடுகளில் எக்காரணம் கொண்டும் அனுமதியின்றி பட்டாசுகள் வைத்திருக்கக் கூடாது. அண்மையில் வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் எதிா்பாராதவிதமாக வெடித்ததால் தான் உயிரிழப்பு, பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும். வீடுகளில் பட்டாசு தயாரிப்பது, விற்பது தெரியவந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்க வேண்டும். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சா், ஆட்சியா் வலியுறுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.மணிமேகலை, நாமக்கல் கோட்டாட்சியா் த.மஞ்சுளா, மோகனூா் வட்டாட்சியா் ஜானகி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com