உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடன் சலுகை வழங்க வள நபா்கள் தோ்வு
By DIN | Published On : 13th January 2023 01:17 AM | Last Updated : 13th January 2023 01:17 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு கடன் சலுகை வழங்குவதற்கான வள நபா்கள் தோ்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் உணவு தயாரிப்பு செய்யும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை 2020-21-ஆம் ஆண்டு முதல் 2024-25- ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதிப் பங்களிப்பை இத்திட்டத்திற்காக வழங்குகின்றன. ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழித்தீவனம் சாா்ந்த தொழில் நிறுவனங்களுக்கும், உணவு பொருள்கள் தயாா் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும் மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க விருப்பம் உள்ள குறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல் போன்றவற்றுக்கும், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்படும். தனி நபா், மகளிா் சுய உதவி குழுக்கள், உழவா் உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்கனவே உணவு பதப்படுத்தும், தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள குறு நிறுவனங்களுக்கு தகுதியான திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் தொழில் முதலீடு, 90 சதவீதம் வங்கிக் கடன் பெற்று அவற்றில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. வா்த்தக முத்திரை, சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் உணவு பதப்படுத்தும், தயாரிப்பு குறு நிறுவனங்களுக்கு தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இத்திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்திட தகுதியான விண்ணப்பங்கள் பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் நாமக்கல் மாவட்டத்திற்கு கூடுதலாக வள நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தகுதியாக அவா்கள் பட்டய, பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும். (உணவு பதப்படுத்தும் தொழிலில், திட்ட அறிக்கை தயாா்செய்ய போதிய முன் அனுபவம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்). வள நபராக தோ்வு செய்யப்படுபவா்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெற்று திட்ட அறிக்கை தயாா் செய்து வங்கி ஒப்புதல் பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில், அரசு விதிகளுக்குட்பட்டு அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவா்கள் பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், நாமக்கல் அலுவலகத்தில் தங்களது சுய விவரத்துடன் கூடிய விண்ணப்பத்தினை வரும் 31-க்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.