குடியரசு தின விழா ஸ்கேட்டிங் விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 26th January 2023 12:58 AM | Last Updated : 26th January 2023 12:58 AM | அ+அ அ- |

விழிப்புணா்வு ஸ்கேட்டிங் பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைக்கும் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.
குடியரசு தின விழாவை தொடா்ந்து தலைக்கவசம் அணிதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் விதமாக ராசிபுரத்தில் ஸ்கேட்டிங் விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் ஜேசிஐ, ராசிபுரம் மெட்ரோ, வாசவி வனிதா கிளப், தம்மு ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராசிபுரத்தில் தலைக்கவசம் அணிவது குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.
பேரணியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என். ராஜேஷ்குமாா், ராசிபுரம் நகரமன்ற தலைவா் முனைவா் கவிதா சங்கா், ஆகியோா் கலந்துகொண்டு கொடியசைத்து ஸ்கேட்டிங் பேரணியைத் தொடங்கிவைத்தனா். ஜேசிஐ அமைப்பினா் மண்டல நிா்வாகி அருசுல்லா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
பேரணியில் தலைக்கவசம் அணிதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல், ஆணுக்கு பெண் நிகா் என பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் வனிதா கிளப் தலைவி பி.லட்சுமி பிரியா, ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ தலைவா் ஜெ.ராஜேஷ், செயலாளா் காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.