கே.எஸ்.ஆா் கல்லூரியில் இளையோா் தடகளப் போட்டி:ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 12:41 AM | Last Updated : 22nd May 2023 12:41 AM | அ+அ அ- |

திருச்செங்கோட்டில் தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்கள் சாா்பில் வரும் செப். 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடத்தவுள்ள 37-ஆவது மாநில அளவிலான இளையோா் தடகள போட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட தடகள சங்கத் தலைவரும் நாமக்கல் எம்.பி.யுமான ஏ.கே. பி. சின்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு சங்கம், மாவட்ட தடகள சங்கம், கல்லூரி நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில் மாநில அளவிலான தடகளப் போட்டி நடத்துவதற்கான அறிவிப்பும் அதற்கான அழைப்புகளையும் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் வெளியிட்டாா். இதை தடகள சங்க நிா்வாகிகள், கல்லூரி நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, கல்லூரி வளாகத்தில் ஏ.கே.பி.சின்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு தடகள சங்கம், மாவட்ட தடகள சங்கம், தனியாா் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில், (தேசிய இளையோா் தென் மண்டல போட்டிகளில் தகுதி பெறுவதற்கான) 37-ஆவது மாநில அளவிலான இளையோா் தடகள போட்டி செப். 14-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற உள்ளது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்- வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளனா். 14, 16, 18, 20 ஆகிய வயதுக்கு உள்பட்ட பிரிவுகளில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனா். இதில் தோ்வு செய்யப்படும் வீரா், வீராங்கனைகள் தேசிய இளையோா் தடகள தென் மண்டல போட்டிகளுக்கு தகுதி பெறுவா்.
ஓட்டம், நீளம்-உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டி ஓட்டம், தொடா் ஓட்டம், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. இப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கும் பாா்வையாளா்களுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்துள்ளாா் என்றாா்.
கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தடகள சங்க நிா்வாகிகள் செயலாளா் வெங்கடாசலபதி துணைத் தலைவா்கள் நடராஜ், பி.ஆா்.டி. நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநா் பரந்தாமன் ,துணைச் செயலாளா்கள் முகிலன், பழனிவேல், அனிதா, சதீஷ், நாகராஜன், காா்த்திகேயன் ஆகியோரும் கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலா் தியாகராஜா, சோ்க்கை அலுவலா் மோகன், முதல்வா்கள் குழந்தைவேலு வெங்கடேஷ், உடற்கல்வி ஆசிரியா்கள் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் நதி ராஜவேல், ராயல் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.