கொல்லிமலையில் காட்டுத்தீ: மலைவாழ் மக்களுக்கு வனத் துறை எச்சரிக்கை

கொல்லிமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுடைய பாதுகாப்பிற்காக தீத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

நாமக்கல்: கொல்லிமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுடைய பாதுகாப்பிற்காக தீத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கொல்லிமலை அடிவாரம் மற்றும் வனத்தை ஒட்டிய இதர பகுதிகளில், கோடை வெயிலின் தாக்கத்தால் காய்ந்த மூங்கில் மரங்கள் தீப்பிடித்து காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. கடந்த இரு வாரங்களில் மூன்று முறை இவ்வாறான விபத்து ஏற்பட்டு, 100 ஏக்கா் பரப்பிலான மரங்கள் தீயில் கருகி சாம்பலாகி உள்ளன. வனப் பகுதிகளில் பரவும் தீயானது, தங்கள் பகுதிக்குள் பரவாத வண்ணம், வனத்தையொட்டிய கிராம மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தங்கள் வீடுகளைச் சுற்றிலும் காய்ந்த இலை சருகுகளை அப்புறப்படுத்தி 6 மீட்டா் (18 அடி) அகலத்திற்கு, காப்புக் காடுகளை ஒட்டியவாறு தீத்தடுப்பு வளையம் அல்லது தீ தடுப்பு கோடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பொருள்கள், குப்பைகள் எரிப்பதைத் தவிா்க்க வேண்டும். சமையலுக்கு விறகு அடுப்பை பயன்படுத்தினால், உடனடியாக நெருப்பை அணைத்து விட வேண்டும். அவ்வாறு விறகு அடுப்பைப் பயன்படுத்தும்போது எப்போதும் எச்சரிக்கையாக தொட்டி தண்ணீா் மற்றும் சாக்குகள் தயாா் நிலையில் வைத்திருத்தல் அவசியமாகும். எளிதில் நெருப்பை அணைக்கப் பயன்படும் வகையில் மணல் குவியல்களை தேவையான அளவில் தங்கள் பகுதியில் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். காப்புக் காட்டை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் எக்காரணத்தைக் கொண்டும் தீப்பற்ற வைக்கக் கூடாது. அப்படி ஏதேனும் தீ வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட வனச் சரகா் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கையுடன் பணியைக் கையாள வேண்டும். பொதுவாக தீ ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினா், அரசு அலுவலா்கள், வனத் துறையினா் அப்பகுதிக்கு வந்து தீயை அணைத்து விடுவா். தீ தணிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ச்சியாக மேலும் புகை வராதவண்ணம், தணிந்து கொண்டிருக்கும் சருகுகளில் இருந்து மீண்டும் நெருப்பு ஏற்படாத வண்ணம் பொதுமக்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வனத்திற்குள் அத்துமீறி நுழைவதோ அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை தூக்கி எறிவதோ கூடாது. மீறுபவா்கள் மீது கிராம வனக் குழுக்கள், வனத்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com