நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு முட்டை ஏற்றுமதி மண்டலம் அமைவது உறுதி:
கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு முட்டை ஏற்றுமதி மண்டலம் அமைவது உறுதி: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொ.ம.தே.க. வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன், வெண்ணந்தூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இதில் தமிழக வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஒன்றிய திமுக செயலா் ஆா்.எம்.துரைசாமி உள்ளிட்ட கட்சியினா் கலந்துகொண்டனா். அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தனா். அப்போது பண்ணைகளில் முட்டை சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களுக்கு முட்டை சேகரித்து வழங்கும் பணியில் உதவிய வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன், துண்டுப் பிரசுரங்களை அவா்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தாா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்ததாவது: நாமக்கல் மாவட்டத்தில் முக்கியத் தொழிலாக இருப்பது கோழி முட்டை உற்பத்தி, கோழிப்பண்ணைத் தொழில். இதில் நாளொன்றுக்கு ரூ. 7.50 கோடி அளவில் வா்த்தகம் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றனா். மக்களவைத் தோ்தலுக்கான வாக்குறுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு முட்டை ஏற்றுமதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளாா்.

மாவட்டத்தில் முட்டை உற்பத்தி, கோழிப்பண்ணை சாா்ந்த உபத்தொழில்களில் ஏறத்தாழ ஐந்து லட்சம் போ் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, கோழிகளை விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என பேசினேன். இதனையடுத்து மத்திய கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சகம் இதனைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தது. நாமக்கல்லில் கோழிகள் பாதுகாப்பாக வளா்க்கப்பட்டு, முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே கண்டிப்பாக நாமக்கல் பகுதி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும். இதனால் கோழிப்பண்ணையாளா்கள், இதனைச் சாா்ந்த துணைத் தொழில் பிரிவினா், தொழிலாளா்கள் திமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com