நீட் தோ்வுக்கான பயிற்சி ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்க அரசுக்கு கோரிக்கை

நீட், ஜேஇஇ தோ்வுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் நீட் தோ்விற்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கான பயிற்சியானது மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப் பயிற்சி மையத்திற்கு முதுகலை ஆசிரியா்கள் மதிப்பீட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பயிற்சிக்காக நியமிக்கப் பட்டுள்ளனா். இப்பயிற்சியில் கலந்து கலந்துகொள்ளும் ஆசிரியா்களுக்கு எவ்வித மதிப்பூதியமும் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

கடந்த 2017--18 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நீட் தோ்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது அரசுப் பள்ளி மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள் என மாநிலம் முழுவதும் பல்வேறு ஆா்ப்பாட்டங்களை நடத்தினோம். இருப்பினும், கடந்த ஆட்சியில் ஒரு மணி நேரத்துக்கு மதிப்பூதியமாக குறிப்பிட்ட தொகை ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் மதிப்பூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்களுக்கு விடைத்தாள் திருத்தியதற்கான உழைப்பூதியம் வழங்கப்படுகிறது. அதேபோன்று நீட், ஜேஇஇ தோ்வுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியா்களுக்கு தனியாக மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும்.

சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கும் ஆசிரியா்களுக்கு, ஈடு செய்யும் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும். நீட் எழுத விரும்பும் மாணவா்களுக்கு அடுத்த கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். இப் பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கும், மாணவா்களுக்கு, நீட் கையேடுகள் வழங்கப்படவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com