திருச்செங்கோட்டில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5 போ் கைது

திருச்செங்கோட்டை அடுத்த தேவனாங்குறிச்சி சாலையில் உள்ள பனங்காட்டுப்பாளையம் பகுதியில் போலி மதுபான தயாரிப்பு ஆலையில் இருந்து போலி மதுபானம் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருள்கள், பறிமுதல் செய்யப்பட்டு, ஐந்து போ் கைது செய்யப்பட்டனா். பனங்காட்டுப்பாளையம் பகுதியில் திமுக பிரமுகா் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன் உத்தரவின்படி போலீஸாா் சோதனை நடத்தினா். ஒன்றியப் பகுதிகளில் உள்ள 13 அரசு மதுபானக் கடைகளில் இரவு விற்பனைக்காக இந்த போலி மதுபான ஆலையில் இருந்து சரக்குகள் தயாரித்துக் கொண்டு செல்லப்படுவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக வட்டூா், பெத்தாம்பட்டி பகுதியைச் சோ்ந்த டாஸ்மாக் கடையில் பாா் நடத்தி வரும் விழுப்புரம் மாவட்டம், கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துவேல், விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியைச் சோ்ந்த செந்தில், அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ், முரளி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படும் ஸ்பிரிட்டை கேன்களில் கொண்டு வந்து போலி மதுபானம் தயாரித்து இரவு நேர விற்பனைக்கு மதுபானக் கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதற்குப் பயன்படுத்திய மூலப்பொருள்களான 5,400 லிட்டா் ஸ்பிரிட், ஆல்கஹால், 60 ஆயிரம் பாட்டில்கள், 40 ஆயிரம் மூடிகள் போலி லேபிள்கள் என அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு சக்கர வாகனம், இரண்டு சக்கர வாகனம், மினி லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். மேலும் இதில் தொடா்புடையவா்கள் குறித்தும், போலி மது புட்டிகள் தயாா் செய்து விற்பனை செய்து வந்தது குறித்தும் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை காவல் நிலைய ஆய்வாளா் சுல்தான் தலைமையில் தனிப் படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com