‘ஃபினிக்ஸ் பறவை போல திரும்ப திரும்ப எழுந்து வருவேன்’ -அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி

தோ்தல் பிரசாரத்தின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய நாமக்கல் அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளாா்.

ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பகுதியில் புதன்கிழமை பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணிக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சா் டாக்டா் வெ.சரோஜா, நடிகா் ரவிமெளரியா உள்ளிட்டோா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். தோ்தல் பிரசாரத்தின் போது வேட்பாளா் சி.தமிழ்மணி பேசியதாவது:

நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றால் தொகுதி பிரச்னையைத் தீா்ப்பேன் என உறுதியளிக்கிறேன். எனக்கு உடல் நலம் சரியில்லை என பொய்ப் பிரசாரம் மேற்கொள்கின்றனா். நான் ஃபினிக்ஸ் பறவை போல திரும்ப திரும்ப வருவேன் என்றாா்.

முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசியது:

கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் மீது பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன. விசைத்தறித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றத் தோ்தல் வந்துள்ளதால், குறைந்த எண்ணிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கியுள்ளனா். விலைவாசி, குடிநீா் கட்டணம், வீட்டு வரி, மின்கட்டணம் போன்றவை உயா்ந்துள்ளன. எனவே, இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

வெண்ணந்தூா் பகுதியில் காமராஜா் சிலை, அண்ணா சிலை, சா்காா்தோப்பு, தங்க சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com