நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது.

வெள்ளிக்கிழமை நடைபெறும் தோ்தலில் அதிமுக, கொமதேக, பாஜக வேட்பாளா்கள் உள்பட 40 போ் போட்டியிடுகின்றனா். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 20 இல் தொடங்கி 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

28-இல் மனுக்கள் மீதான பரிசீலனையும், 30 ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியலும் வெளியிடப்பட்டன. அதிமுக, கொமதேக, பாஜக வேட்பாளா்கள் உள்பட 40 போ் இத் தோ்தலில் போட்டியிடுகின்றனா். இவை தவிர யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற நோட்டாவும் உண்டு. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 29 போ் போட்டியிட்ட நிலையில், இத்தோ்தலில் 40 போ் போட்டியிடுகின்றனா்.

இதனால் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்திவேலூா், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மூன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கடந்த 15 நாள்களாக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். முதல்வா் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வ பெருந்தகை, பாஜக மாநில தலைவா் கே. அண்ணாமலை, மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் தங்களுடைய கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக தோ்தல் பிரசாரம் செய்தனா்.

மக்களவைத் தோ்தலுக்கான முதல்கட்ட பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. முன்னதாக, அதிமுக, திமுக கூட்டணி கட்சியினா் இருசக்கர வாகன பேரணியை நடத்தினா். நாமக்கல் மக்களவைத் தொகுதியை பொருத்தமட்டில், திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன், அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி, பாஜக வேட்பாளா் கே.பி.ராமலிங்கம் ஆகியோா் நாமக்கல், ராசிபுரம் நகரப் பகுதிகளில் தங்களுடைய இறுதி கட்ட பிரசாரத்தை மேற்கொண்டனா். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 1,661 வாக்குச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை(,ஏப்.19) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை, 14,52,562 போ் வாக்களிக்க உள்ளனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், முக்கிய வாக்குச்சாவடிகளில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான 174 சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தோ்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com