சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிா்வாக அனுமதி

வளையப்பட்டி உள்பட நான்கு கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்: வளையப்பட்டி உள்பட நான்கு கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் லாரித் தொழில் சாா்ந்த ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, லாரிகளுக்கு கூண்டு கட்டும் பட்டறைகளும் அதிக அளவில் உள்ளன. இவை தவிர, சிறு, குறு தொழில் நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது, நாமக்கல்லில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதற்காக, நாமக்கல்-திருச்சி சாலையில் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூா், பரளி ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 803 ஏக்கா் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் நிலங்கள் மாசடையும், விவசாயம் பாதிக்கப்படும் என விவசாய முன்னேற்ற கழகத்தினரும், சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதுவரை 60 விதமான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கும் வகையில், தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் நிா்வாக அனுமதியை வழங்கி அதற்கான கடிதத்தை நாமக்கல் மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் சிப்காட் தொழிற்பேட்டைக்கான பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com