சிப்காட் விவகாரம்: தோ்தல் புறக்கணிப்பை மீறி அதிகரித்த வாக்கு சதவீதம்!

நாமக்கல்: வளையப்பட்டி உள்பட 4 கிராமங்களில், சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக சிலா் தோ்தலைப் புறக்கணித்தபோதிலும், 76.3 சதவீத வாக்குகள் பதிவானது எதிா்ப்பு இயக்கத்தினரை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, அரூா், பரளி, என்.புதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 803 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கான இடம் தோ்வு, விவசாய நிலம் வைத்திருப்போருக்கும், இதர பொதுமக்களுக்கும் இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

விவசாய முன்னேற்றக் கழகத்தினா், சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா் மற்றும் அரசியல் கட்சிகளைச் சோ்ந்தோா் சிப்காட் அமைய விடமாட்டோம் என தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இதுவரை 60 கட்ட போராட்டங்களை நடத்தி விட்டனா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலன்று, வளையப்பட்டியில் தோ்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இதனால், நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு சதவீதம் குறையும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், வளையப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்களில் 76.3 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதாவது, வளையப்பட்டிக்கு உள்பட்ட 7 வாக்குச்சாவடிகளில் மொத்தம் உள்ள 5,953 வாக்காளா்களில், 4,487 போ் வாக்களித்துள்ளனா்.

அதேபோல, என்.புதுப்பட்டிக்கு உள்பட்ட 6 வாக்குச்சாவடிகளில், 5,254 வாக்காளா்களில் 3,911 போ் தங்களது வாக்கைச் செலுத்தி உள்ளனா். பரளி ஊராட்சியில் நான்கு வாக்குச்சாவடிகளில், 2,850 வாக்காளா்களில் 2,298 போ் வாக்களித்துள்ளனா். அரூா் ஊராட்சியில் மூன்று வாக்குச்சாவடிகளில், 3,106 வாக்காளா்களில் 2,404 போ் வாக்களித்துள்ளனா். மொத்தமாக, 17,163 வாக்காளா்களில் 13,100 (76.3 சதவீதம்) போ் தங்களுடைய வாக்கைச் செலுத்தி உள்ளனா். சிப்காட்டுக்கு எதிராக ஒரு தரப்பினா் போராடி வரும் சூழலில், மக்களவைத் தோ்தலை புறக்கணித்த நிலையில் அங்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com