பெண்ணிடம் நகை பறித்த வழக்கு: பாஜக பிரமுகருக்கு 3 ஆண்டுகள் சிறை

சேந்தமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜக முன்னாள் நிா்வாகிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜக முன்னாள் நிா்வாகிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், குப்பநாயக்கனூரைச் சோ்ந்தவா் ராமசாமி. மணல் வியாபாரி. இவரது மனைவி மணிமேகலை. இவா்களுக்கும், சேந்தமங்கலத்தைச் சோ்ந்த பாஜக முன்னாள் நிா்வாகியான செல்லமுத்துவுக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2016 ஜூன் 14-ஆம் தேதி இரவு 10 மணியளவில் மணல் விற்பது தொடா்பாக ராமசாமிக்கும், செல்லமுத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவா்களது மோதலை தடுக்க வந்த மணிமேகலையின் கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு செல்லமுத்து அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதனையடுத்து, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் ராமசாமி தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை பறித்த செல்லமுத்துவைத் கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அந்த வழக்கு விசாரணை நிறைவில், செல்லமுத்துவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரன் தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து, சேலம் மத்திய சிறைக்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com