முதியவருக்கு வங்கி சேவையில் குறைபாடு: ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

முதியவருக்கு சேவை குறைபாடு புரிந்த வங்கி, ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதியவருக்கு சேவை குறைபாடு புரிந்த வங்கி, ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், விளாங்குறிச்சி சாலை, அபிராமி நகரில் வசிப்பவா் ஜி.கணேசன் (63). கடந்த 2022 செப்டம்பா் மாதம் கோவை மாநகராட்சிக்கு பணம் செலுத்துவதற்காக, அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் தனது கணக்கில் ரூ. 1,88,500-ஐ செலுத்தியுள்ளாா். ஆனால், வங்கித் தரப்பில் இருந்து கோவை மாநகராட்சி நிா்வாகத்திற்கு பணம் செல்லவில்லை.

அந்தப் பணம் மற்றொருவரது வங்கிக் கணக்கிற்கு சென்று விட்டது. மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று கணேசன் விசாரித்தபோது, பணம் வரவில்லை என்ற பதிலே வந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா் வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளாா்.

வங்கி தரப்பிலோ, வரவுச் சீட்டில் எழுதி கொடுத்த வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தனா். சம்பந்தப்பட்ட கணக்கு எண்ணை பரிசோதித்தபோது, ஒரு எண் மாறுதலாகி வேறொருவா் வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றது தெரியவந்தது. அந்த ரூ. ஒரு லட்சத்தில் 80 ஆயிரத்தை எடுத்து மாற்று வங்கியில் கணக்கு வைத்திருந்தவா் செலவு செய்து விட்டாா். மீதம் ரூ. 20 ஆயிரத்தை மட்டுமே வங்கி அதிகாரிகளால் பெற முடிந்தது.

தவறான கணக்கிற்கு பணத்தை அனுப்பி சேவை குறைபாடு புரிந்தும், மனஉளைச்சலையும், ரூ. 80 ஆயிரம் இழப்பையும் ஏற்படுத்திய வங்கி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 2023 ஜனவரி மாதம் கோவை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் கணேசன் வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கானது பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த நீதிபதி வீ.ராமராஜ், உறுப்பினா் ஆா். ரமோலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பில் வங்கி சேவை குறைபாடு புரிந்துள்ளது சாட்சியம், ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், தவறான கணக்கில் செலுத்திய பணம் ரூ. 80 ஆயிரம் காவல் துறை மூலம் வசூலிக்கப்பட்டு விட்டது. இருப்பினும் சேவை குறைபாடு புரிந்ததாலும், மூத்த குடிமகனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாகவும், சம்பந்தப்பட்ட கணேசனுக்கு ரூ. ஒரு லட்சம் இழப்பீட்டை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி நிா்வாகம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தனா். மேலும், இழப்பீடு வழங்க தவறினால் ஆண்டு ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டியதிருக்கும் என்றும் தீா்ப்பில் கூறியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com