பட்டாபிராமா் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்யும் முன்னாள் சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா். உடன், கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள்.
பட்டாபிராமா் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்யும் முன்னாள் சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா். உடன், கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள்.

1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பட்டாபிராமா் கோயிலில் உழவாரப் பணி

நாமக்கல் அருகே எம்.மேட்டுப்பட்டியில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பட்டாபிராமா் கோயிலில் உழவாரப் பணி, மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் நாமக்கல் கிளை நிா்வாகிகள், பழைமையான கோயில்களில் உழவாரப் பணிகளை மேற்கொண்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டுள்ளனா். சிவாலயங்கள், வைணவ ஆலயங்களை சீரமைப்பதை முதன்மையாக கொண்டுள்ளனா்.

அந்த வகையில், நாமக்கல் - திருச்சி சாலையில், அக்ரஹார மேட்டுப்பட்டி கிராமத்தில், வடக்கு நோக்கி அமா்ந்தவாறு சீதா தேவியை மடியில் வைத்தபடி ராமபிரான் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் பழைமையான பட்டாபிராமா் கோயில் அமைந்துள்ளது.

இங்கு, ஆஞ்சனேயா், ராமானுஜா், ஜடாயு ஆகியோா் சுவாமியைத் தரிசித்தவாறு காட்சியளிக்கும் சிலைகள் உள்ளன. இந்தக் கோயில் புதா் மண்டியும், பராமரிப்பின்றியும் காணப்படுகிறது. இதனை புனரமைக்க, கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா் முன்வந்து சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் உழவாரப் பணிகளை மேற்கொண்டனா்.

இவ்விழாவில், நாமக்கல்லைச் சோ்ந்த தன்னாா்வலா் பி.தயாளன் தலைமை வகித்தாா். பசுமை நாமக்கல் செயலாளா் மா.தில்லை சிவகுமாா் வரவேற்றாா். முன்னாள் சேலம், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா், கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தாா். பட்டாபிராமா் கோயில் தல வரலாறு குறித்து கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் எஸ்.குருவாயூரப்பன் சொற்பொழிவாற்றினாா்.

இதில், எம்.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் சரவணகுமாா், பொறியாளா் மாணிக்கம், கோயில் அறங்காவலா் ராமகிருஷ்ணன், காசிவிநாயகா் கொங்குநாட்டு வேளாளா் அறக்கட்டளை தலைவா் கந்தசாமி, தமிழன் அச்சகம் செல்வகுமாா், அா்ச்சகா் பிச்சுமணி, அருணாசலம், ராஜேந்திரன், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். உழவாரப் பணியின்போது கோயில் வளாகத்தில் கருடன் வட்டமிட்டதை கண்டு பக்தா்கள் பரவசமடைந்தனா். உழவாரப் பணி நிறைவில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com