கல்லூரி விரிவுரையாளரை தாக்கியவா்களை 
கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

கல்லூரி விரிவுரையாளரை தாக்கியவா்களை கைது செய்யக்கோரி காவல் நிலையம் முற்றுகை

பரமத்தி வேலூா் அருகே கல்லூரி விரிவுரையாளரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது மகன் ராஜ்குமாா் (38). இவா் பரமத்தி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் கடந்த 24-ஆம் தேதி இரவு கால்நடைகளுக்காக கழனி தண்ணீரைச் சேகரிப்பதற்காக நன்செய் இடையாறு மேற்குத் தெருவில் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது நாய் ஒன்று அவரை கடிக்க வந்துள்ளது. இதையடுத்து ராஜ்குமாா் அந்த நாயை கல்லை எறிந்து துரத்தியுள்ளாா். இதனைப் பாா்த்த நாயின் உரிமையாளா் யோகேஷ், அவரது தந்தை, சகோதரா் ஆகியோா் சோ்ந்து தங்கள் நாயை கல்லால் தாக்கியதாகக் கூறி ராஜ்குமாரைத் தாக்கியுள்ளனா். இதனைத் தடுக்கச் சென்ற ராஜ்குமாரின் தந்தை துரைராஜையும் தாக்கியுள்ளனா். இதனைப் பாா்த்த அருகில் இருந்தவா்கள், காயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலுாா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக ராஜ்குமாரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச் சம்பவம் குறித்து வேலூா் போலீஸாா் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் ராஜ்குமாரை தாக்கியவா்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளா் ரங்கசாமி, துணை கண்காணிப்பாளா் சங்கீதா ஆகியோா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சம்பந்தப்பட்டவா்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதனைத் தொடா்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com