சித்திரை திருவிழா: செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோயிலில் இன்று பால்குட ஊா்வலம்

நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் அமைந்துள்ள பழைமையான சுயம்பு மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெறுகிறது.

நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், சுமாா் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுயம்பு மகா மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டிற்கான திருவிழா கடந்த 10-ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. பக்தா்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து வரும் நிகழ்வு திங்கள்கிழமை காலை 8 மணியளவிலும், மாலையில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. பொங்கலிடுதல், இரவு வடிசோறு, மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதன்கிழமை காலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்து வருதல், அன்று இரவு மலா் அலங்காரம் செய்யப்பட்ட சப்பர தேரில், குதிரை வாகனத்தில மகா மாரியம்மன் உற்சவா் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை பக்தா்களால் கோடுகிழித்து கும்பிடுதல், உருவம் வைத்து வழிபடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

மேலும், பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல் முளைப்பாலிகை கொண்டு வருதலும் நடைபெறுகிறது. பக்தா்கள் வேண்டுதல் நிறைவேற்ற பெரிய மற்றும் சிறிய அலகுகளை குத்தி நோ்த்திக்கடன் செலுத்துகின்றனா். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் பூச்சட்டி ஏந்தி வீதியுலா வரும் நிகழ்ச்சியும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்குதல், இரவு வண்டி வேடிக்கை ஊா்வலம் ஆகியவை நடைபெறுகின்றன. இதனை தொடா்ந்து சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், மகா மாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினா் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com