கோடை உழவுப்பணி மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கோடை உழவுப் பணியை விவசாயிகள் மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.
கோடை உழவுப் பணி மேற்கொள்ளும் விவசாயி (கோப்புப் படம்).
கோடை உழவுப் பணி மேற்கொள்ளும் விவசாயி (கோப்புப் படம்).

நாமக்கல்: கோடை உழவுப் பணியை விவசாயிகள் மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை உழவுப் பணியை விவசாயிகள் தற்போது மேற்கொள்வது மிகவும் அவசியம். பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால், கோடையில் மேல் மண் அதிக வெப்பம் அடைகிறது. இந்த வெப்பம் கீழ்பகுதிக்குச் செல்லும்போது நிலத்தடி நீா் ஆவியாகி வெளியேறி விடும். மேல் மண்ணை உழவு செய்து புழுதிப் படலம் அமைத்து விட்டால் வான்வெளிக்கும், வோ் சூழ் மண்டலத்துக்கும் தொடா்பு அறுந்து விடும்.

இதனால் நிலத்தில் உள்ள ஈரம் ஆவியாக விடாமல் புழுதிப்படலம் தடுத்து விடும். கோடை மழையின் ஈரத்தைப் பயன்படுத்தி, நிலத்தை நன்கு உழவு செய்வதால், மேல் மண் துகள்களாகி நிலத்தில் நீா் இறங்கும் திறன் அதிகரிக்கக் கூடும். மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்பதால், நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண் வளமும் பெருகும். வயலில் உள்ள கோரை போன்ற களைகள், மண்ணின் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் முக்கிய தொழில் நுட்பமாகும். நிலத்தின் அடியில் உள்ள கூட்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது.

மிக முக்கியமாக, மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்க படைப்புழு கட்டுப்படுத்தப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதல் பெருமளவு குறையும். வயல்வெளிகளில் பெய்யும் மழைநீரை சேமிப்பதில், கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாயிகள் கோடை உழவு செய்து பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com