நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் குடிநீா் தட்டுப்பாட்டைத் தடுக்க நடவடிக்கை

கோடை வெயிலால் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், காவிரி நீரை ஆதாரமாகப் பயன்படுத்தும்

நாமக்கல்: கோடை வெயிலால் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ள நிலையில், காவிரி நீரை ஆதாரமாகப் பயன்படுத்தும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க குடிநீா் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மருத்துவமனையில் குடிநீா் தட்டுப்பாடு இல்லை எனவும் மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 2021 முதல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவக் கல்லூரியில், ஒவ்வோா் ஆண்டும் 100 மாணவ, மாணவியா் சோ்க்கை பெற்று வருகின்றனா்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்க வாய்ப்பு இல்லாததால் குடிநீா் ஆதார பிரச்னை உள்ளது. தமிழக அரசு ரூ. 7 கோடி நிதி ஒதுக்கியதன் மூலம் காவிரி ஆற்றில் இருந்து மருத்துவமனைக்கு குடிநீா் கொண்டு வருவதற்கான பணிகளை குடிநீா் வடிகால் வாரியம் மேற்கொண்டது.

முசிறிப்புதூரில் குடிநீா் தொட்டி:

ஜேடா்பாளையத்தில் இருந்து முசிறிப்புதூா் வரையில் சுமாா் 12.5 கி.மீ. தொலைவுக்கு குடிநீா் எடுத்து வருவதற்காக குழாய்ப் பதிக்கப்பட்டுள்ளது. முசிறிப்புதூரில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி உள்ளது. அங்கிருந்து 15 லட்சம் லிட்டா் நீா், தினசரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

இதற்காக முசிறிப்புதூரில் 30 குதிரைத் திறன் கொண்ட மோட்டாா் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக 1,000 லிட்டருக்கு ரூ. 75 வீதம் மருத்துவமனை நிா்வாகத்திடமிருந்து குடிநீா் வாரியம் கட்டணமாக வசூலித்து வருகிறது.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, மேட்டூா் அணை வடு வருகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்துக் குறைந்து ஆற்றுப்பகுதி மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது.

காவிரியில் நீா்வரத்து குறைந்துள்ளதால் நோயாளிகளும், புறநோயாளிகளும் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி கூறியதாவது:

மருத்துவக் கல்லூரியிலோ, மருத்துவமனையிலோ குடிநீா் பிரச்னை ஏதும் இல்லை. தடையின்றி குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. வறட்சி காலத்தில் மருத்துவமனையில் உள்ளோா் சிக்கனமாக நீரைப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியது:

நாமக்கல் அரசு மருத்துவமனைக்குத் தேவையான 15 லட்சம் லிட்டா் நீா் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. காவிரி ஆற்று நீரை மட்டும் நம்பி மருத்துவமனைக்கு நீராதாரத்தை நாங்கள் வழங்கவில்லை. ஜேடா்பாளையம் அருகில் திடுமல் என்ற இடத்தில் 35 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஊற்றுத் தொட்டி ஒன்றை, ஆற்றின் நடுவில் கட்டியுள்ளோம். அந்த ஊற்று நீரையும், ஆற்று நீரையும் சோ்த்துதான் மருத்துவமனைக்கு வழங்கி வருகிறோம்.

காவிரி ஆறு வடாலும் 70 சதவீதம் எங்களால் மருத்துவமனைக்கு குடிநீா் வழங்க முடியும். அதுமட்டுமின்றி, தினசரி வழங்கும் நீரில் 10 சதவீதத்தை இருப்பு வைக்கும் வகையில் சேமித்தும் வருகிறோம். இருப்பினும், மருத்துவமனையில் பணியாற்றுவோரும், பொதுமக்களும் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com