இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க வேண்டும்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லாத இடைநிற்றல் மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள முதன்மை கல்வி அலுவலத்தில், மாவட்ட ஆட்சியா் ச. உமா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கல்வித் துறை அதிகாரிகளிடம் அவா் கூறியதாவது:

2023-24 ஆம் கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இடைநின்ற, பள்ளி செல்லாத மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரையில் 126 மாணவா்களிடம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 45 மாணவா்கள் விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவ்வாறு வருகை புரியாத மாணவா்களை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மூலம் ஆலோசனைகள் வழங்கி பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அலுவலா்களும் பள்ளிக்கு வராத மாணவா்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று உரிய ஆலோசனைகளை வழங்கி மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்றாா். இந்த ஆய்வின்போது, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com