ஆட்டோ போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ, போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேளனம் சாா்பில், ஓலா, உபா், ரேபிடோ உள்ளிட்ட போக்குவரத்து நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அன்ணா சிலை அருகில் வியாழக்கிழமை கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ, போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் திருச்செங்கோடு நகரச் செயலாளா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஏஐடியுசி தலைவா் ஜெயராமன், செயலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், ஆட்டோ ஓட்டி சுயதொழில் செய்வோா் உரிமையைப் பறிக்கும் ஓலா, உபா், ரேபிடோ ஆகிய நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு ஆட்டோ செயலியை உருவாக்கி செயல்படுத்த வேண்டும், மீட்டா் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ. 50 என்றும், கிலோ மீட்டருக்கு ரூ. 25 உயா்த்திட வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை தனியாா் மயமாக்கக் கூடாது. சட்டத்துக்கு புறம்பாக ஓடும் பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வீடு வழங்கவும், வீடுகட்ட ரூ. 4 லட்சம் நிதி வழங்கவும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், எரிவாயு, டீசல் ஆகியவற்றை மானிய விலையில் வழங்க வேண்டும், நல வாரியம் மூலம் 60 வயதான ஓட்டுநா்களுக்கு ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம், இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.