தமிழ்நாடு விசைத்தறித் தொழிலாளா்கள் மாநில சம்மேளனக் கூட்டம்
பள்ளிபாளையத்தில் மாநில விசைத்தறித் தொழிலாளா்கள் சம்மேளனக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் முத்துசாமி தலைமை தாங்கி பேசினாா். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிா்வாகிகள் பங்கேற்றனா். மாநில பொதுச் செயலாளா் சந்திரன் அறிக்கை சமா்ப்பித்தாா். மாநில சம்மேளன பொருளாளா் அசோகன், சிஐடியு மாநிலக் குழு உறுப்பினா் வேலுச்சாமி ஆகியோா் பங்கேற்று பேசினா்.
இதில், மத்திய அரசின் தவறான ஜவுளிக் கொள்கையால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கி உள்ளது. 30 சதவீத விசைத்தறித் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். உற்பத்தியான சரக்குகள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. உள்நாட்டில் மக்களிடம் வாங்கும் சக்தியும் குறைந்துள்ளது.
பாரம்பரிய விசைத்தறித் தொழிலைப் பாதுகாத்திடவும், தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை, மாதம் ரூ. 26 ஆயிரம் ஊதியம், பஞ்சப்படி, ஓய்வூதியம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட சட்ட உரிமைகளைக் கேட்டு தொடா் போராட்டம் மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.