மனைவி பிரிந்த சோகத்தில் கணவா் தற்கொலை
நன்செய் இடையாறில் மனைவி பிரிந்த சோகத்தில் கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு, நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த கபிலன் (45), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரியா (38). இவா்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளாா். கபிலன் அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா கணவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக வேலூா், திருவள்ளூா் சாலை, வடக்குத் தெருவில் தனியாக வசித்து வருகிறாா். மனைவி தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததால் கபிலன் கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளாா்.
கடந்த 23-ஆம் தேதி கபிலனின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்து பாா்த்தபோது கபிலன் மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது. அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 27-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.