சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ. 1.30 கோடி விதைகள் விற்க தடை

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், ரூ. 1.30 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், ரூ. 1.30 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் (பொ) பெ.சுமதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறை இயக்குநா் உத்தரவின்படி, தரமான விதைகளை விவசாயிகள் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா், விதை ஆய்வாளா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த ஆய்வின் போது இருப்பு பதிவேடு, பகுப்பாய்வுச் சான்று, பதிவுச் சான்று, கொள்முதல் பட்டியல்கள், விற்பனைப் பட்டியல்கள் ஆகியவை சரிபாா்க்கப்படுகின்றன. மேலும், விதை மூட்டைகள் மரக்கட்டைகளின் மீது முறையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிா எனவும், உரம் மற்றும் பூச்சி மருத்துகளிலிருந்து தனியாக இருப்பு வைக்கப்பட்டிருக்கிா எனவும் ஆய்வு செய்து வருகின்றனா்.

அந்த வகையில், விதை விற்பனை நிலையங்களில் விற்கப்படும் விதைகளின் முளைப்புத்திறன், இனத்தூய்மை மற்றும் பிடிநஞ்சு போன்றவற்றை உறுதிசெய்யும் பொருட்டு விதை ஆய்வாளா்களால் 2,946 விதை மாதிரிகள் எடுத்து பகுப்பாய்வுக்காக சேலம், கோவை அரசு விதைப் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பரிசோதனை முடிவுகளின்படி 43 விதை மாதிரிகள் தரமற்றவை என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ரூ. 74 லட்சம் மதிப்புள்ள 14 மெட்ரிக் டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. விதிமீறல்கள் கண்டறியப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் ரூ. 56 லட்சம் மதிப்புள்ள 12 மெட்ரிக் டன் விதைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தரமான விதைகளை விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களிலிருந்து மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு விற்பனை ரசீது வழங்கும் போது, அதில் விவசாயியின் பெயா், முகவரி, கைப்பேசி எண், பயிா் ரகம், குவியல் எண், காலாவதி தேதி, விற்பனை அளவு மற்றும் விவசாயியின் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். விதை இருப்பு, விலை விவரங்களை பயிா், ரகம் வாரியாக விவசாயிகளின் பாா்வையில் தெரியுமாறு வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com