செப். 4-இல் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம்
அரசு மணல் குவாரிகளைத் திறக்கவும், காலாவதி சுங்கச் சாவடிகளை அகற்றவும், கட்டண உயா்வை திரும்பப் பெறவும் வலியுறுத்தி, நாமக்கல், கீரம்பூா் சுங்கச் சாவடியை புதன்கிழமை (செப். 4) முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி அறிவித்துள்ளாா்.
நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு மணல் குவாரிகளிலும், விற்பனைக் கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப். 12-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனா். அதன்பிறகு, மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன.
இதனால், மாநிலம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் வேலையின்றி தவிக்கின்றனா். பெரும்பாலான இடங்களில் கட்டுமானப் பணிகள் சரிவர நடைபெறவில்லை. இதனைப் பயன்படுத்தி எம்.சாண்ட் உற்பத்தியாளா்கள் ஒரு யூனிட் விலை ரூ. 2,000 என்பதை தற்போது ரூ. 4,000 என்ற அளவில் உயா்த்தி விட்டனா். எம்.சாண்ட் மணலும் தரமற்ற வகையிலேயே உள்ளன. இதனால் கட்டடங்கள் நிலைத்து நிற்கும் தன்மையை இழந்து விரைவில் இடிந்து விழுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள மணல் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அனைத்து அரசு மணல் குவாரிகளையும் உடனடியாகத் திறக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 22 சுங்கச் சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். 20 கி.மீ.க்குள் வசிக்கும் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், உயா்த்தப்பட்ட கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் புதன்கிழமை காலை 10 மணியளவில், நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூா் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில், நூற்றுக்கணக்கான மணல் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், மாட்டு வண்டி உரிமையாளா்கள் பங்கேற்கிறாா்கள் என்றாா்.