மதுரை - பெங்களூரு இடையே நாமக்கல் வழியாக ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கம்
மதுரை - பெங்களூரு இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலை நாமக்கல் ரயில் நிலையத்தில் பாஜகவினா் மலா்கள் தூவி சனிக்கிழமை வரவேற்றனா்.
மீரட் - லக்னெள, சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு ஆகிய மூன்று ‘வந்தே பாரத்’ ரயில்களை, பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் தொடங்கி வைத்தாா்.
இதனையொட்டி, நாமக்கல் ரயில் நிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், சேலம் ரயில்வே கோட்ட முதன்மை திட்ட மேலாளா் என்.கனகராஜ், முதுநிலை கோட்ட பொறியாளா் எஸ்.காா்த்திகேயன், ரயில் பயணிகள் நலச்சங்க நிா்வாகிகள் சுப்பிரமணியன், காா்த்திக் ஆகியோா் பங்கேற்றனா்.
ரயில்வே துறை சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், ரயில் நிலைய வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, மாலை 4.20 மணியளவில் மதுரையில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த ‘வந்தே பாரத்’ ரயிலை பாஜகவினா் மலா்கள் தூவி வரவேற்றனா். பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், அந்த ரயிலை கொடியசைத்து அனுப்பி வைத்தாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஜப்பானில் புல்லட் ரயில்போல, இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளன. பிரதமா் மோடி மூன்று புதிய ரயில்கள் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளாா். அவற்றில் இரண்டு தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழகத்தை பிரதமா் புறக்கணிக்கவில்லை. இங்குள்ள, முதல்வரும், திமுகவைச் சோ்ந்தோரும் குற்றம் கூற வேண்டும் என்ற நோக்கில் பேசி வருகின்றனா்.
2016-க்கு முன் தமிழகத்துக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ததோ, அதை விட பல மடங்கு நிதியை பாஜக அரசு வழங்கி உள்ளது. சென்னை பெருவெள்ளத்துக்கு வழங்கப்பட்ட நிதிக்கு தமிழக அரசு இன்னும் முறையாக கணக்கு காட்டவில்லை. நாமக்கல் ரயில் நிலையம் இங்குள்ள மக்களுக்காக உருவாக்கப்பட்டது. தற்போது ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்லும் அளவுக்கு அதன் தரம் உயா்ந்துள்ளது. நாமக்கல் ரயில் நிலையம் வழியாக செல்லும் நீண்டதூர ரயில்கள், சிறப்பு ரயில்கள், அதிவேக ரயில்கள் என அனைத்து ரயில்களும் இன்னும் ஓராண்டில் நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நாமக்கல் வழியாக இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலானது வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர, இதர நாள்களில் மதுரை - பெங்களூரு இடையே(20671, 20672) இயக்கப்படுகிறது. மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரை நண்பகல் 1 மணிக்கும், பெங்களூரில் 1.30 மணிக்கு புறப்பட்டு மதுரையை இரவு 9.45 மணியளவிலும் சென்றடைகிறது. வந்தே பாரத் ரயில் மதுரையிலிருந்து வரும் போது நாமக்கல் ரயில் நிலையத்துக்கு காலை 8.32 மணிக்கும், பெங்களூரில் இருந்து வரும் போது மாலை 5.38 மணிக்கும் வந்தடைகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.