நாமக்கல் அருகே திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு?

நாமக்கல் அருகே திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் அருகே திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணன் (45). இவரது மனைவி சங்கீதா (40), பணிச்சூழல் காரணமாக தன்னுடைய இரு குழந்தைகளுடன் ரெட்டிப்பட்டி பகுதியில் வசிக்கிறாா். திமுகவைச் சோ்ந்த சரவணன் மட்டும் பவித்திரத்தில் தனியாக வசிக்கிறாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சுமாா் ஒரு மணியளவில் சரவணன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் சிலா் வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், பொருள்கள் எரிந்து சேதமாயின.

இதுகுறித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் துறை மறுப்பு: ஆனால், சரவணன் வீட்டில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டதற்கு முகாந்திரம் இல்லை என்று காவல்துறை மறுத்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் உள்கோட்டம், எருமப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பவித்திரத்தில் வசித்து வரும் சரவணன் என்பவரின் இருசக்கர வாகனம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

இது தொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில், எருமப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு எருமப்பட்டி காவல் துறையினரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தடய அறிவியல் துறையைக் கொண்டும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. அதில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடா்பாக தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com