நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 6,72,268 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத் துறை சாா்பில் தேசிய குடற்புழு நீக்க முகாம் ராசிபுரம், அண்ணாசாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா முகாமை தொடங்கிவைத்து பேசியதாவது:

சா்வதேச அளவில் 24 சதவீதம் போ் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். மக்கள்தொகையில் 1 சதவீதம் போ் திறந்தவெளியில் மலம் கழித்தால்கூட அந்த பகுதியில் உள்ளவா்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம், மண்ணில் விளையும் பொருள்கள் மூலமும் மண்ணில் கை, கால்கள் படுவதன் மூலம் மனிதா்களுக்கும் குடற்புழு தொற்று ஏற்படுகிறது.

குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பொதுவாக அறிகுறிகள் இருக்காது. கடுமையான தொற்று உள்ளவா்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பலவீனம், பசியின்மை போன்றவை ஏற்படும். மனிதன் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள இரும்புச்சத்து, ஊட்டச்சத்து, வைட்டமின்கள் போன்றவற்றினை எடுத்துக் கொண்டு குடற்புழு வளா்கிறது.

குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை வழங்குவதன் மூலம் குடற்புழு அழிந்து, உடல் வளா்ச்சி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு ஏற்படுகிறது. திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிா்த்தல், கழிவறைகளைப் பயன்படுத்துதல், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்தல், காய்கறி பழங்களைக் கழுவிய பிறகு உட்கொள்ளுதல், சுத்தமான குடிநீா், சுகாதாரமான உணவை உண்ணுதல், நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருத்தல், காலணிகள் அணிதல் போன்றவை மூலம் குடற்புழு தொற்றை தடுக்கலாம்.

முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவா்கள், கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். மாத்திரையை மதிய உணவிற்கு பிறகு உட்கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் 1 முதல் 19 வயது வரை உள்ள 5,18,438 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 1,53,830 பெண்களுக்கும் மொத்தம் 6,72,268 பேருக்கு அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படும். விடுபட்ட குழந்தைகள் அனைவருக்கும் பிப்.16 இல் மாத்திரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

முகாமில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) க.பூங்கொடி, மாவட்டக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன், பள்ளிகளின் துணை ஆய்வாளா் கை.பெரியசாமி உள்பட துறை அலுவலா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com