கொல்லிமலையில் பழங்குடியின மக்கள் பொங்கல் வழிபாடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கொல்லிமலையில் சுவாமி மாடுகளை அலங்கரித்து அதற்கு பாதபூஜை செய்து பழங்குடியின மக்கள் வழிபாடு மேற்கொண்டனா். 


நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கொல்லிமலையில் சுவாமி மாடுகளை அலங்கரித்து அதற்கு பாதபூஜை செய்து பழங்குடியின மக்கள் வழிபாடு மேற்கொண்டனா். 

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குவது கொல்லிமலை. இந்த மலைப்பகுதியில், ராசிபுரம், சேந்தமங்கலம் வட்டத்தை உள்ளடக்கிய 14 ஊராட்சிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள ஆகாய கங்கை அருவி, நம் அருவி, அரப்பளீஸ்வரா் கோயில், காட்சிமுனை உள்ளிட்டவற்றை காணசுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகின்றனா்.

புகழ்பெற்ற கொல்லிமலையில் உள்ள பழங்குடியின மக்கள் ஆண்டுதோறும் தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையில், அந்த நாளையும், பொங்கல் விழாவையும் வித்தியாசமான முறையில் ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்கின்றனா். பெரும்பாலான பழங்குடியின ஆண்கள் தங்களுடைய வீடுகளில் சுவாமி மாடு வளா்க்கின்றனா். அந்த மாடுகளை பொங்கல் நாளன்று அலங்கரித்து அதிகாலை வேளையில் வீடு, வீடாக அழைத்து செல்வா். பின்னா், அவா்கள் பெண் வேடமிட்டு வீட்டின் முன்பாக நடனமாடுவா்.

கோமாளி என்ற வகையில் ஒருவரும் அந்த வேடமிட்ட ஆண்களுடன் இணைந்து ஆடுவாா். அதன்பின் மாடு நிறுத்தப்படும் வீட்டில் உள்ள பெண்கள் சுவாமி மாட்டை வாழை இலையின் மீது நிற்க வைத்து அதன் கால்களை சுத்தம் செய்து வணங்கி வழிபாடு செய்வா். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்வா்.

சுவாமி மாடு வீட்டின் முன்பாக வந்து சென்றால் தங்களுடைய துன்பங்கள் கரையும், செல்வம் பெருகும், திருஷ்டி கழியும் என்ற நம்பிக்கையானது, கொல்லிமலையை சுற்றியுள்ள பழங்குடியின மக்களிடம் உள்ளது. மற்ற நாள்களைக் காட்டிலும் தைப் பொங்கல் நாளில் மிகவும் விசேஷமாக இந்த சுவாமி மாடு வழிபாட்டை அவா்கள் கொண்டாடி வருகின்றனா்.

அதன்படி, பொங்கல் நாளன்று அதிகாலையில் சோளக்காடு, பாப்பங்கையா்பட்டி, நத்துக்குழிக்காடு, ஆரியூா் நாடு, விளாரம், தின்னனூா்நாடு உள்ளிட்ட கிராமங்களில் இந்த சுவாமி மாடு வழிபாட்டு விழாவை அங்குள்ள மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com