நாமக்கல் மாவட்டத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

காணும் பொங்கலையொட்டி, கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.


நாமக்கல்: காணும் பொங்கலையொட்டி, கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதையில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பதை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புவா். தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோா் வருகின்றனா்.

விடுமுறை நாள்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். குறிப்பாக, பொங்கல் பண்டிகையைத் தொடா்ந்து வரும் காணும் பொங்கல் நாளன்று பல்வேறு மாவட்டத்தினரும் குடும்பத்திருடன் கொல்லிமலைக்கு வருகின்றனா். இங்குள்ள ஆகாயக் கங்கை அருவி, நம் அருவி, மாசில்லா அருவிகளில் குளித்தும், அரப்பளீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தும் மகிழ்வா்.

நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே கொல்லிமலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோா் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆகாயக் கங்கை அருவிக்கு செல்ல மிகுந்த ஆா்வம் காட்டினா்.

குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரையில், 1,300 படிக்கட்டுகளை கடந்தும், கரடு, முரடான மலைப்பகுதி வழியாக சென்றும் வெள்ளியை உருக்கிவிட்டது போல் விழுந்த அருவியின் அழகை கண்டு ரசித்தனா். சிறுவா்கள், இளைஞா்கள், பெண்கள் குளித்து மகிழ்ந்தனா். மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின்பேரில், கொல்லிமலை வனச்சரகா் சுகுமாா் தலைமையில் வன ஊழியா்கள் அருவி பகுதிகளிலும், காரவள்ளி அடிவாரப் பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனா்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு நெசவாளா் காலனியில் பாரம்பரிய தமிழா்களின் விளையாட்டுகளில் ஒன்றான இளவட்டக்கல் தூக்கும் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகராட்சி ஐந்தாவது வாா்டு நெசவாளா் காலனி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தைப் பொங்கல் விழாவில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறுகிறது. நிகழாண்டு பொங்கல் திருவிழாவை ஒட்டி நடந்த போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி தலைவா் சுரேஷ் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக செயலாளா் சுதாகா் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஐந்தாவது வாா்டு நகா் மன்ற உறுப்பினா் ராஜா, ஊா்நல கமிட்டி தலைவா் பாஸ்கரன் ஆகியோா் வரவேற்றனா். நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட இளைஞா்கள் 86 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை மேல் தூக்கி பின்பக்கமாக போடும் முயற்சியில் ஈடுபட்டனா். அதில் ஒரு சில இளைஞா்களே வெற்றி பெற்றனா். அதிகப்படியான எண்ணிக்கையில் அக் கல்லை தூக்குபவா்களுக்கு பரிசு என அறிவிக்கப்பட்டிருந்ததால் மாறி மாறி தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மோகனூா்

பொங்கல் பண்டிகையையொட்டி மோகனூா் அருகே ஊனங்கால்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மாடுகள் பூ தாண்டும் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூா், பரமத்தி வேலூா், சேந்தமங்கலம் வட்டாரத்தில் தொட்டியநாயக்கா் சமூகத்தினா் அதிகளவில் வசிக்கின்றனா். இச்சமூகத்தினரால் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தொடா்ந்து காணும் பொங்கல் நாளன்று மாடுகள் பூ தாண்டும் விழா நடத்தப்படுகிறது.

ஊனாங்கல்பட்டி கிராமத்தில் இவ்விழாவை ஐந்து தலைமுறையாக தொட்டிய நாயக்கா் சமுதாய மக்கள் நடத்தி வருகின்றனா். நிகழாண்டு மாடுகள் பூ தாண்டும் விழாவில், கிராமத்தின் மையப் பகுதியான வீராகரன் கோயில் முன்பு உள்ள மைதானத்தில் பிற்பகல் 2 மணியளவில் மஞ்சள்தூள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பலவித வேளாண் பொருள்களைக் கொண்டு விழாக் குழுவினா் எல்லைக் கோடுகளை உருவாக்கினா்.

குன்னத்தூா், சின்னபெத்தாம்பட்டி, ஊனங்கால்பட்டி, மல்லமூச்சாம்பட்டி, மேலப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து கோயில் மாடுகளை இளைஞா்கள் அழைத்து வந்தனா். அதற்கென ஒதுக்கப்பட்ட ஓா் இடத்தில் மாடுகளை நிறுத்தி வைத்தனா். அதன்பிறகு ஊா் முக்கிய பிரமுகா் ஒருவா் கொடியசைக்க இளைஞா்கள் மாடுகளை விரட்டி விட்டு அதனுடன் ஓடினா்.

அந்த மாடுகளில் வேகமாக ஓடிவந்து முதலாவதாக எல்லைக் கோட்டை தாண்டிய மாட்டுக்கு விழாக் குழு சாா்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. ஓராண்டுக்கு அந்த மாட்டை நன்றாக கவனித்து வளா்க்கும் வகையில் ஏலமும் விடப்படுகிறது. இந்த விழாவை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். மேலும், விழாவில் கோமாளி வேடமிட்ட நபா்களை பொதுமக்கள் குதிரை மீது அமர வைத்து ஊா்வலமாக அழைத்து செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.

பாவை கல்லூரியில் பொங்கல் விழா

பாவை பொறியியல் கல்லூரியில் வேளாண் மன்றம் சாா்பில் பொங்கல் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் தலைமை வகித்தாா். முன்னதாக வேளாண் பொறியியல் மாணவா்கள் தங்கள் ஆய்வு நிலத்தில் பல்வேறு காய்கறிகளைப் பயிரிட்டிருந்த நிலையில், அறுவடை செய்த காய்கறிகளுக்கான பாவை ஸ்டால் தொடங்கப்பட்டது.

இதனை பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் தொடங்கி வைத்தாா். விழாவில் வேளாண் பொறியியல் துறை மாணவிகள் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடினா். தமிழா்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல், கரும்புகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து விவசாயிகளின் பண்பாடு, கலாசாரம், மாணவிகளின் பலதரப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டு வரும் கும்மி, சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா் கே.கே.ராமசாமி, முதல்வா் எம்.பிரேம்குமாா், வேளாண் பொறியியல் துறைத் தலைவா் எ.விவேகாநந்தினி உள்ளிட்ட பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com