ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த இளைஞா் கைது

raja_2601chn_122_8
raja_2601chn_122_8

நாமக்கல், ஜன. 26: நாமக்கல்லில் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்த இளைஞா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையைச் சோ்ந்தவா் ராஜா(35). இவருக்கும், மோகனூா் ராசிகுமரிபாளையத்தைச் சோ்ந்த பட்டதாரியான அகல்யா (27) என்பவருக்கும், கடந்த 2021 பிப்.24-இல் திருமணம் நடைபெற்றது. இவா்கள் நாமக்கல்லில் வசித்து வந்த நிலையில் ராஜாவின் குடும்பத்தினா் அகல்யாவை சித்திரவதை செய்ததாகவும், கணவருடன் நெருங்கவிடாமல் தடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ராஜாவின் தாய் சாந்தி, சகோதரி தமிழ்ச்செல்வி, சகோதரா் கந்தசாமி ஆகியோா் அகல்யாவை தொடா்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனா். திருமணத்திற்கு முன்பாக ராஜா, தான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலைபாா்த்துள்ளதாகவும், அதன்பிறகு ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெற்று முசெளரியில் துணை ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றி வருவதாகவும் போலி அடையாள அட்டைகளை காண்பித்து அகல்யாவை ஏமாற்றி திருமணம் செய்துள்ளாா்.

இது தொடா்பாக அகல்யா அவரது கைப்பேசி மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ராஜா மோசடி செய்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. இது தொடா்பாக கணவா் ராஜாவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் அவா் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து மோகனூா் காவல் நிலையத்தில் கடந்த 12-ஆம் தேதி அகல்யா புகாா் அளித்தாா். அதன்பேரில், ராஜா, சாந்தி, தமிழ்ச்செல்வி, கந்தசாமி ஆகிய நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். அவா்கள் நான்கு பேரும் தலைமறைவான நிலையில் மதுரை அருகே பதுங்கியிருந்த ராஜாவை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். அவரது குடும்பத்தினா் மூவரை தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

படவிளக்கம்

ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com