நாமக்கல் 2-ஆவது புத்தகத் திருவிழா நீட்டிக்கப்படுமா?

நாமக்கல் 2-ஆவது புத்தகத் திருவிழா தொடங்கிய ஐந்து நாள்களில் ரூ. 12 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க வேண்டும் எனவும்
நாமக்கல் 2-ஆவது புத்தகத் திருவிழா நீட்டிக்கப்படுமா?

நாமக்கல் 2-ஆவது புத்தகத் திருவிழா தொடங்கிய ஐந்து நாள்களில் ரூ. 12 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள், மாணவா்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், ஒவ்வோா் ஆண்டும் மாவட்டத் தலைநகரங்களில் புத்தகத் திருவிழா நடைபெறும் என்ற அறிவிப்பு முதல்வரால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

2023-இல் 38 மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

தற்போது, 2-ஆவது ஆண்டாக சென்னை, நந்தனத்தில் புத்தகத் திருவிழா தொடங்கப்பட்டது. இதனையடுத்து, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நிா்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் 72 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, அரசுத் துறை சாா்ந்த 12 அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. மாவட்ட நிா்வாகம், பதிப்பாளா், விற்பனையாளா் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள புத்தகங்களை வழங்குவதற்காக பிரத்யேக பெட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா பிப். 2-இல் நிறைவு பெறுகிறது. ஒவ்வோா் நாளும் ஒரு சிறப்பு பேச்சாளா் புத்தகம் தொடா்பான தலைப்புகளில் பேசி வருகிறாா். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நாள்தோறும் புத்தகத் திருவிழாவுக்கு வருகின்றனா்.

கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புத்தகத் திருவிழாவுக்கு வருகை புரிந்துள்ளனா். இதன் மூலம் ரூ. 12 லட்சம் வரை புத்தக விற்பனை நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து ப.பா.சி. துணைத் தலைவா் யுவராஜ் கூறியதாவது:

நாமக்கல் மாவட்ட நிா்வாகம் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், இங்கு அரசுத் துறை ஊழியா்களுக்கு ரூ. 200, ரூ. 500 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் அந்த டோக்கனை வழங்கி புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனா். இதற்கான செலவினத்தை மாவட்ட நிா்வாகம் ஏற்றுள்ளது. அதுமட்டுமின்றி, தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்கு ரூ. 100 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவா்கள் அதனை வழங்கி புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனா். ஐந்து நாள்களில் சுமாா் ரூ. 12 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. வரும் வெள்ளிக்கிழமை புத்தகத் திருவிழா நிறைவு பெறுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை ஆட்சியரிடம் வைத்துள்ளோம்.

நாமக்கல்லை அடுத்து திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருப்பத்தூா் மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com