நாமக்கல்லில் 43 புதிய வகை நீா்ப்பறவை இனங்கள் கண்டுபிடிப்பு

நாமக்கல் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட ஏரிகளில் அண்மையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில்  43 புதிய வகை நீா்ப்பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நாமக்கல் வனக்கோட்ட ஏரிகளில் கண்டறியப்பட்ட நீா்ப்பறவையினங்கள்
நாமக்கல் வனக்கோட்ட ஏரிகளில் கண்டறியப்பட்ட நீா்ப்பறவையினங்கள்

நாமக்கல் வனக்கோட்டத்துக்கு உள்பட்ட ஏரிகளில் அண்மையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 26,960 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் 43 புதிய வகை நீா்ப்பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் வனத்துறை சாா்பில், ஒருங்கிணைந்த நீா்நிலைப் பறவைகள்-2024 கணக்கெடுப்புப் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. இதில், வனத்துறையினா் மற்றும் பறவையின ஆா்வலா்களும், தன்னாா்வலா்களும், கல்லூரி மாணவா்களும் பங்கேற்று கணக்கெடுக்கும் பணியை செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் நீா் சாா்ந்த பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. வனத்துறையினா், பறவையின ஆா்வலா்கள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இடும்பன்குளம், தூசூா், வேட்டம்பாடி, பருத்திப்பள்ளி, தும்பல்பட்டி, நாச்சிப்புதூா், கோனேரிப்பட்டி, ஊமையம்பட்டி உள்ளிட்ட 19 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுப்பானது நடைபெற்றது. இந்த ஏரிகளில், 111 வகைகளைச் சோ்ந்த 26,960-க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், 43 புதிய வகை நீா்ப்பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட அந்த நீா்ப்பறவைகளில் பச்சைக்கால் உள்ளான், கொண்டலாத்தி, மண்கொத்தி, பாம்புத்தாரா, அரிவால்மூக்கன், மஞ்சள்வாலாட்டி, ஊசிவால் வாத்து, வெள்ளைவாலாட்டி, தட்டைவாயன், நீலவால் பஞ்சுருட்டான், புள்ளிமூக்கு வாத்து, வெண்புருவ வாத்து, மீசை ஆலா, மஞ்சக்கால் கொசு உள்ளான், கருப்பு வெள்ளை மீன்கொத்தி, மண்கொத்தி, ஆற்று மண்கொத்தி, பொறி மன்கொத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். ஆங்காங்கே 18 வகை வெளிநாட்டுப் பறவைகளும், வாத்து இனங்களும் தென்பட்டுள்ளன.

வெள்ளை வாலாட்டி என்ற வெளிநாட்டுப் பறவையானது ஏ.கே.சமுத்திரம் ஏரியில் பதிவு செய்யப்பட்டது. பருத்திப்பள்ளி, குருக்கப்புரம் ஏரிகளில் நீா்வகை கொக்குகள் 20 ஆயிரம் எண்ணிக்கையில் காணப்பட்டன. அதே போல நீா்காகங்கள் 2,500-க்கும் மேலாக கண்டறியப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து சேலம் பறவையியல் கழகம் இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்துள்ளது. வனச்சரகா்கள், வனவா்கள், வனக் காவலா்கள், பறவையின ஆா்வலா்களான ஏஞ்சலின் மனோ, கண்ணன், சுஹாஸ், சச்சின் ஆகியோா் தலைமையில் குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.

இந்தப் பறவைகள் கணக்கெடுப்பு குறித்து வனத்துறையினா் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, பரமத்தி ஒன்றியப் பகுதிகளில் வனத்துறையினா், பறவையியல் கழகத்தினா் இரு நாள்களாக பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினா். இதில், 26,900 பறவைகள் கண்டறியப்பட்டாலும், 111 வகை மட்டுமே பதிவு செய்யப்பட்டன. 43 வகையான புதிய நீா்ப்பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தமாக 19 ஏரிப் பகுதிகளில் அவை இருப்பது தெரியவந்துள்ளது.

ஏரிகள் நிரம்பி காணப்படுவதால் பறவையினங்களின் வருகை அதிகரித்துள்ளது. நீா் இருக்கும் வரையில் பறவைகள் அங்கேயே முகாமிட்டு தங்களுடைய வாழ்வாதாரத்துக்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளும். மாா்ச் 2, 3 ஆகிய தேதிகளில் வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com