ஜூலை 5-இல் உயிா்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி.

நாமக்கல்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிா்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்ட அறிக்கை:

கடந்த 1970 முதல் 1980-ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் கடும் வறட்சி நிலவியது. விவசாயிகள் வேளாண் பணிகளைத் தொடங்குவதற்கு கையிருப்பு தொகை ஏதுமில்லாமல் தவித்தனா்.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி பயிா் செய்து வந்தனா். இதற்கிடையே கடுமையான வறட்சி ஏற்பட்டதால், கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிா்க் கடன்களை கடனை திருப்பிச் செலுத்த அவா்களால் இயலவில்லை. கடனை திருப்பிச் செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை என தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் அறிவித்தன.

கடன் நெருக்கடி, மின் கட்டண உயா்வு போன்ற நெருக்கடிகளில் தவித்துக் கொண்டிருந்த விவசாயிகளை காப்பாற்ற அப்போதைய மறைந்த தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் நாராயணசாமி நாயுடு தலைமையில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்தப் போராட்டங்களை ஒடுக்க தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 53 விவசாயிகள் உயிரிழந்தனா். இவற்றில், 1972 ஜூலை 5-இல் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்த 9 விவசாயிகளும் பலியாகினா். ஒவ்வோா் ஆண்டும் ஜூலை 5-ஆம் தேதி உயிா்நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில், வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதில், விவசாயிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com