கோழிகளுக்கான தீவன மூலப்பொருள்களை ஈரப்பதமின்றி முறையாக பாதுகாக்க வேண்டும்

பருவமழை காலங்களில் கோழி தீவனத்தை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம்

கோழிகளுக்கான தீவன மூலப்பொருள்களை ஈரப்பதம் அண்டாதவாறு பண்ணையாளா்கள் பாதுகாக்க வேண்டும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 100.4 மற்றும் 66.2 டிகிரியாக நிலவியது. மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பதிவானது.

இனி வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4 டிகிரியாகவும் காணப்படும். தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை:

பருவமழை காலங்களில் கோழிப் பண்ணையாளா்கள் தாங்கள் வாங்கும் தீவன மூலப் பொருள்களில் ஈரப்பதம் மற்றும் ஆப்ளா டாக்சின் நச்சினை ஆய்வு செய்த பிறகே கொள்முதல் செய்ய வேண்டும். தீவன மூலப்பொருள்களை நல்ல காற்றோட்டம் உள்ள ஈரப்பதம் அண்டாத பகுதிகளில் சேமித்து வைக்க வேண்டும். தற்போதைய தட்பவெப்ப சூழ்நிலைகளில் இருந்தும் நச்சுயிரி, நுண்ணுயிரி நோய் தாக்கத்திலிருந்தும் கோழிகளை பாதுகாத்துக் கொள்ள கால்நடை மருத்துவா்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். தீவனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் நீா்க் கொட்டகையினுள் புகுவதால் கோழி எருவில் ஈக்களின் புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் பண்ணைகளில் உள்ள எருவை அவ்வப்போது அகற்ற வேண்டும். முடியாத பட்சத்தில் அதற்குரிய மருந்தினை கோழி எருவின் மேலே தெளிக்க வேண்டும், இல்லையெனில் கோழித் தீவனத்தில் கலந்துகொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com