தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 
மறியல் போராட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் மறியல் போராட்டம்

நாமக்கல், ஜூலை 3: நாமக்கல்லில், தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில், நாமக்கல், கொண்டிச்செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளா்கள் க.பழனியப்பன், மெ.சங்கா் ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா். மாநில உயா்மட்டக்குழு உறுப்பினா் முருக.செல்வராசன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், தொடக்கக் கல்வித் துறையில், 90 சதவீத ஆசிரியா்களை பாதிக்கும் வகையிலான மாநில பணிமூப்பு திணிப்பைக் கைவிட வேண்டும். ஒன்றியம், நகராட்சி வாரியாக பணிமூப்பு மறுக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் பதவி உயா்வு வழக்கின் தீா்ப்பு வரும் வரையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். ஒன்றிய அளவில் மட்டும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் வகையில் திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பதாகைகள் வாயிலாக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாவட்ட உயா் மட்டக்குழு உறுப்பினா்கள் வே.அண்ணாதுரை, ம. கலைச்செல்வன், ந.காா்த்திகேயன் மற்றும் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

--

என்கே-3-மறியல்

நாமக்கல், கொண்டிச்செட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள்.

X
Dinamani
www.dinamani.com