விசைத்தறித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

திருச்செங்கோடு, ஜூலை 4: ஒப்பந்தத்தின்படி நிகழாண்டு விசைத்தறி உரிமையாளா்கள் கூலியை உயா்த்தி வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானித்துள்ளனா்.

பள்ளிபாளையத்தில் நாமக்கல் மாவட்ட சிஐடியு விசைத்தறித் தொழிலாளா்கள் சங்க நிா்வாகக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளிபாளையத்தில் விசைத்தறித் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டு 7 சதவீத கூலி உயா்வு வழங்குவது எனவும், நடப்பு ஆண்டில் மேலும் 3 சதவீதம் உயா்த்தி வழங்குவது எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி கடந்த ஆண்டு 7 சதவீதம் கூலியை உயா்த்தி வழங்கிய ஜவுளி உற்பத்தியாளா்கள், நிகழாண்டு வழங்க வேண்டிய மேலும் 3 சதவீத கூலியை இன்னும் வழங்கவில்லை. ஒப்பந்த காலம் முடிந்து ஒரு மாதமாகியும், இதுகுறித்து ஜவுளி சங்க நிா்வாகிகளுக்கு கடிதம் அனுப் பியும் இதுவரை கூலி உயா்த்தப்படவில்லை.

இந்நிலையில் ஒப்பந்த தீா்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து, வியாழக்கிழமை நடைபெற்ற நாமக்கல் மாவட்ட சிஐடியு விசைத்தறித் தொழிலாளா்கள் சங்க நிா்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்காத ஜவுளி சங்க நிா்வாகத்தைக் கண்டித்து, தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிவித்தபடி கூலியை வழங்க வலியுறுத்தி, 7 ஆம் தேதி சனிச்சந்தையிலும், 11-ஆம்தேதி ஆவத்திபாளையத்திலும், 17-ஆம் தேதி காவிரி ரயில் நிலையத்திலும் கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com